Home Photo News டாயிம் சைனுடின் : மகாதீரின் வலது கரம்! விசாரணைகள் இனியும் தொடருமா?

டாயிம் சைனுடின் : மகாதீரின் வலது கரம்! விசாரணைகள் இனியும் தொடருமா?

209
0
SHARE
Ad
துன் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் இன்று புதன்கிழமை காலை தனது 86-வது வயதில் காலமானார். மலாய் சமூகத்தில் வணிகத்துறையில் ஈடுபட்டு பெருமளவில் முன்னேறியவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. அந்த அசுர வளர்ச்சி அவரின் அப்போதைய ஆளும் கட்சியான அம்னோவுடனான தொடர்பின் மூலம் உருவானதுதான் – மற்றபடி அவரின் சுயமுயற்சி அல்ல – எனக் கூறுவோரும் உண்டு.

எனினும், முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் நெருக்கத்தால் டாயிம் அரசியலிலும் கால் பதித்தார். அம்னோவின் பொருளாளர், நிதியமைச்சர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். பல சர்ச்சைக்குரிய முடிவுகளையும் அவர் நிதியமைச்சராக எடுத்தார்.

வங்கிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் அவர் எடுத்த முடிவுகள் இன்றுவரை பொருளாதார ரீதியாக தவறானவை என விமர்சிக்கப்படுகின்றன. 1984 முதல் 1991 வரை டாயிம் நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம் அம்னோவில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்காக வழிவிட்டு தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகினார் டாயிம். மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அவர் ஏற்கவில்லை. வணிகத்தைத் தொடர்ந்த அவர் ஆப்பிரிக்க நாடுகளில் பல வங்கிகளில் முதலீடுகள் செய்தார். தனது வணிக ஈடுபாட்டால் பெரும் பணக்காரராக உருவெடுத்தார்.


மேலும் படிக்க : டாயிம் சைனுடின் : நிதியமைச்சராக அதிகாரத்தின் உச்சியில்…! இப்போது நீதிமன்றத்தில்…!


அன்வாருக்கும் மகாதீருக்கும் இடையில் பிணக்கு ஏற்படுத்துவதிலும், அன்வார் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கும், பின்னணியில் டாயிம் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதற்கேற்ப, அன்வார் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டதும் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார் டாயிம். 1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக நிதியமைச்சராகப் பதவி வகித்தார் டாயிம்.

அன்வார் இப்ராகிமின் வாழ்க்கையின் சில சம்பவங்கள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திலும் டாயிம் அன்வாரை வீழ்த்துவதற்குப் பின்னணியில் செயல்பட்டார் என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஒரு கட்டத்தில் அவருக்கும் மகாதீருக்கும் இடையில் கூட கருத்து முரண்பாடுகள் எழுந்தன. அப்போது நிதியமைச்சர் பதவியிலிருந்து டாயிம் விலக, மகாதீரே நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.

காலம் உருண்டோடி, எதிர்பாராத திருப்பங்கள் மலேசிய அரசியலில் 2018-இல் அரங்கேறின. அன்வார் இரண்டாவது ஓரின உறவு குற்றச்சாட்டுக்காக சிறைவாசம் அனுபவித்த தருணம். ஒரு வழக்கறிஞரான டாயிம் மீண்டும் வழக்கறிஞராக வழக்கறிஞர் மன்றத்தில் பதிவு செய்து கொண்டு, அன்வாரின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, சிறைக்கு சென்று அன்வாரை அடிக்கடி சந்தித்தார்.

அந்தச் சந்திப்புகளுக்கான உள்நோக்கம், மகாதீரின் பிரதிநிதியாக சிறையில் இருந்த அன்வாருடன் அரசியல் வியூகத்தையும் தேர்தல் உடன்பாட்டையும் உருவாக்குவதுதான். அதில் வெற்றியும் பெற்றார் டாயிம். 2018 பொதுத் தேர்தலில் அன்வாரும், மகாதீரும் நஜிப்பை வீழ்த்த இணைந்தனர் என்பதும் அந்தப் போராட்டத்தில் மகாதீர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார் – அன்வார் சிறையிலிருந்தும், தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலையானார் – என்பது வரலாறு.

2018 பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு எதிராக – மகாதீருக்கு ஆதரவாக பல பிரச்சாரக் கூட்டங்களிலும் டாயிம் கலந்து கொண்டார். அதன் காரணமாக, அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களுக்கிடையில் 2022-இல் அன்வார் மீண்டும் பிரதமரானார். அடுத்த சில மாதங்களில் அன்வாரை பிரதமராக வீழ்த்த பின்னணியில் டாயிம், மகாதீருடன் இணைந்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில்தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் டாயிம் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியது. அன்வாருக்கும் டாயிமுக்கும் இடையில் மீண்டும் அரசியல் மோதல்கள் வெளிப்படையாக நிகழ்ந்தன.

டாயிம் சைனுடின் மனைவி நய்மா அப்துல் காலிட்

சொத்துகளை அறிவிக்கத் தவறியதற்காக டாயிம் மீதும் அவரின் மனைவி நயிமா காலிட் மீதும் ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு தொடுத்தது.

38 நிறுவனங்களின் உரிமையாளராக இருந்தது – சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், கெடா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் 19 நிலங்களின் உரிமை – மேலும் 6 சொத்துடமைகள் – ஆகியவற்றை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததற்காக டாயிம் மீதும் அவரின் மனைவி மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அமானா சாஹாம் நேஷனல் முதலீடுகள் – 7 விலையுயர்ந்த சொகுசுக் கார்கள் – ஆகியவற்றை அவர் அறிவிக்கவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

தன் மீதான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை எதிர்த்து வழக்குகள் தொடுத்தார் டாயிம். அவரின் மனைவியும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

அந்த விசாரணைகளின் முடிவுகள் தெரியும் முன்னரே – வழக்குகளின் நிலைமை தெளிவாகும் முன்னரே டாயிம் இன்று காலமாகி விட்டார். அவரின் வழக்குகளும் விசாரணைகளும் இனி என்னவாகும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வழக்காட டாயிம் சரியான மனநிலையில் இருக்கிறாரா என்பதை நிர்ணயிக்கவும் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

டாயிம் மரணத்தை உறுதி செய்த வழக்கறிஞர்

86 வயதான டாயிம் முதுமை காரணமாக ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்தார். அவரின் வழக்கறிஞரான குர்டியால் சிங் நிஜார் அவரின் மரணத்தை உறுதி செய்தார்.

டாயிமின் இறுதிச் சடங்குகள் இன்றே (நவம்பர் 13) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-இரா.முத்தரசன்