Home நாடு டாயிம் சைனுடினும் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்!

டாயிம் சைனுடினும் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்!

460
0
SHARE
Ad
டாயிம் சைனுடின் – கோப்புப் படம்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினை கடந்த வாரமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார் என்றும் அதற்காக அனுமதியை சட்டத்துறை அலுலவகம் (அட்டர்னி ஜெனரல்) வழங்கியிருந்தது என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

டாயிம் சைனுடின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை என்றும் அசாம் பாக்கி தெரிவித்தார்.

தற்போது டாயிம் சைனுடின் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு என்ன நோய், எதற்காக சிகிச்சை வழங்கப்படுகிறது போன்ற விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

டாயிம் உடல் நலம் குறித்த முறையான விவரங்கள் வழங்கப்படாததால் நீதிபதி மருத்துவமனை கொண்டு வரப்பட்டு டாயிம் மீதான வழக்கும் பதிவு செய்யப்படலாம் என்றும் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

டாயிம் மனைவி நைமா நேற்று ஜனவரி 23-ஆம் தேதி தன் சொத்து விவரங்களை முறையாக அறிவிக்காத காரணத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டங்களின் 36-வது பிரிவின்படி, அந்த ஆணையம் வழங்கிய ஓர் உத்தரவுக் கடிதத்தை செயல்படுத்தாத காரணத்தால் நைமா அப்துல் காலிட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் நைமாவுக்கு விதிக்கப்படும்.

டாயிம் சைனுடினின் இரண்டு புதல்வர்களும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தங்களுக்கிருக்கும் அயல்நாட்டு சொத்துகள் ரகசியம் அல்ல – மாறாக அவை குறித்து பொது வெளியில் ஏற்கனவே தகவல்கள் இருந்தன எனவும் டாயிம் குடும்பத்தினர் ஏற்கனவே தெரிவித்தனர்.

நேற்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் நைமா ஊழல் தடுப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்காத சொத்துகளின் விவரங்களும் வெளியிடப்பட்டன.

ஏற்கனவே ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கும் இல்ஹாம் கட்டடத்தின் உரிமை குறித்த நிறுவனத்தின் பங்கு விவரங்களையும் நைமா வெளியிடத் தவறினார் என அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நைமாவுக்கு 250,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. அவரின் அனைத்துலக கடப்பிதழும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது. அவரின் வழக்கறிஞர்களாக முன்னாள் அரசாங்க தலைமை வழக்குரைஞர் (சோலிசிட்டர் ஜெனரல்) முகமட் யூசோப் சைனால் அபிடின், எம்.புரவலன் ஆகியோர் செயல்படுகின்றனர்.

வழக்கின் அடுத்த விசாரணை தேதி மார்ச் 22 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அன்வார் இப்ராகிம் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை இதுவென நைமாவும் அவரின் கணவர் டாயிம் சைனுடினும் கூறியிருக்கின்றனர்.