Home நாடு டாயிம் மனைவி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

டாயிம் மனைவி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

442
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா அப்துல் காலிட் தனது சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையாக அறிவிக்காத காரணத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டங்களின் 36-வது பிரிவின்படி, அந்த ஆணையம் வழங்கிய ஓர் உத்தரவுக் கடிதத்தை செயல்படுத்தாத காரணத்தால் நைமா அப்துல் காலிட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் நைமாவுக்கு விதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

டாயிம் சைனுடினின் இரண்டு புதல்வர்களும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தங்களுக்கிருக்கும் அயல்நாட்டு சொத்துகள் ரகசியம் அல்ல – மாறாக அவை குறித்து பொது வெளியில் ஏற்கனவே தகவல்கள் இருந்தன எனவும் டாயிம் குடும்பத்தினர் ஏற்கனவே தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் நைமா ஊழல் தடுப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்காத சொத்துகளின் விவரங்களும் வெளியிடப்பட்டன.

ஏற்கனவே ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கும் இல்ஹாம் கட்டடத்தின் உரிமை குறித்த நிறுவனத்தின் பங்கு விவரங்களையும் நைமா வெளியிடத் தவறினார் என அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நைமாவுக்கு 250,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. அவரின் அனைத்துலக கடப்பிதழும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது. அவரின் வழக்கறிஞர்களாக முன்னாள் அரசாங்க தலைமை வழக்குரைஞர் (சோலிசிட்டர் ஜெனரல்) முகமட் யூசோப் சைனால் அபிடின், எம்.புரவலன் ஆகியோர் செயல்படுகின்றனர்.

வழக்கின் அடுத்த விசாரணை தேதி மார்ச் 22 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அன்வார் இப்ராகிம் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை இதுவென நைமாவும் அவரின் கணவர் டாயிம் சைனுடினும் கூறியிருக்கின்றனர்.