அரசியலுக்கு வருவதற்கு முன்பு சட்டபூர்வமான வணிக நடவடிக்கைகளின் மூலம் தனது செல்வத்தை நீண்ட காலமாக சேர்த்து வைத்திருந்ததாக, சீராய்வு மனு தொடர்பில் தாக்கல் செய்த சத்தியப் பிரமாண ஆவணத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
டாயிம் சைனுடின் கூற்றுப்படி, அவர் ஒரு “மிகவும் வெற்றிகரமான பணக்கார தொழிலதிபர்” ஆவார். அவர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அதுகுறித்து ஊடகங்களிலும் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தன என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
“1970-களில் இருந்து நான் எப்போதும் சொத்துகளை வெளிநாடுகளில் வைத்திருக்கிறேன்,” என்று அவர் தாக்கல் செய்த தனது வாக்குமூல பிரமாணத்தில் கூறினார்.
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) தங்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்த நீதித்துறை மறுஆய்வு செய்ய அனுமதி கோரி டாயிம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பத்துடன் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வணிகத்தில் அவரது பின்னணியும் ஈடுபாடும் எப்போதும் பொது வெளியில் இருந்து வருகிறது, மேலும் அரசியலில் சேரவில்லை என்றால் மேலும் அதிக செல்வம் சேர்த்திருப்பேன் என்றும் டாயிம் கூறினார்.
“நான் வணிகத்தில் இருந்துகொண்டு, இந்த சொத்துக்களை தீவிரமாக வளர்த்திருந்தால் சொத்துகளின் மதிப்பு மட்டும் இன்று RM50 பில்லியனுக்கும் மேல் இருக்கும். அரசாங்கத்தில் அமைச்சராக இணைவதற்காக அந்த வாய்ப்பை நான் இழந்தேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கத்தில் சேர்ந்து எனது நாட்டுக்கு சேவை செய்ய நான் எடுத்த முடிவு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 10-ஆம் தேதியன்று, டாயிம் மற்றும் அவரது குடும்பத்தினர் எம்ஏசிசியை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தனர்.
விண்ணப்பத்தை டாயிம் அவரது மனைவி தோபுவான் நயிமா அப்துல் காலித் ஆகியோர் சமர்ப்பித்து அதில் முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக எம்ஏசிசி மற்றும் அரசு வழக்கறிஞரைக் குறிப்பிட்டனர்.
எம்ஏசிசியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மற்றும் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென தங்களின் மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு ஜனவரி 16-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி வான் அகமது ஃபரித் வான் சலே முன்னிலையில் இயங்கலை வழி (ஆன்லைனில்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.