Home இந்தியா “இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்” – வினாடி வினா புதிர் போட்டி – வெளியுறவுத் துறை அமைச்சர்...

“இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்” – வினாடி வினா புதிர் போட்டி – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடக்கி வைத்தார்

198
0
SHARE
Ad

புதுடில்லி : வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ‘பாரத் கோ ஜானியே’ என்னும் ‘இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்’ வினாடி-வினா போட்டியின் ஐந்தாவது பதிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

இந்த போட்டி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியா பற்றிய தங்கள் அறிவை சோதித்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 11) வெளியிடப்பட்ட காணொலி அறிவிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கவும், மற்றவர்கள் இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் சாதனைகளின் தனித்துவமான அம்சங்களை கண்டறியவும் இந்த வினாடி-வினா எவ்வாறு பாலமாக செயல்படுகிறது என்பதை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

“ஐந்தாவது பாரத் கோ ஜானியே வினாடி-வினாவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று தனதுரையில் அறிவித்த ஜெய்சங்கர், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான பிணைப்புகளை ஆழப்படுத்தவும், இந்தியாவின் செழுமையை ஆராய ஆர்வமுள்ளவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான  அரசு முன்னெடுத்துள்ள முயற்சி இதுவென விவரித்தார்.

#TamilSchoolmychoice

14-50 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்த வினாடி-வினா, பங்கேற்பாளர்கள் இந்தியாவின் பாரம்பரியம், விழுமியங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பற்றி அறிந்து கொள்ள ஒரு சுவாரசியமான பயணமாகும். “இந்த வினாடி-வினா மக்கள் இந்தியாவின் கலாச்சாரம், தத்துவம், வரலாறு, சாதனைகள், மற்றும் அதன் எதிர்பார்ப்புகள் குறித்து அர்த்தமுள்ள முறையில் ஆராய தனித்துவமான வழியை வழங்குகிறது,” என்று ஜெய்சங்கர் கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வினாடி-வினா போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: அயல்நாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மற்றும் இந்திய வம்சாவளியினர் (PIOs) மற்றும் வெளிநாட்டினர் என்பதே அந்த 2 பிரிவுகளாகும். பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பிரிவுகள், நாடு அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் இந்தியா மீதான ஆர்வமுள்ள அனைவரையும் சென்றடைகிறது.

முதல் 30 வெற்றியாளர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கவுள்ளது. இந்தியாவின் துடிப்பான கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்க இரண்டு வார இந்திய சுற்றுப்பயணம் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். “வாருங்கள், வினாடி-வினாவில் பங்கேற்று அற்புதமான இந்திய பயணத்தில் இணையுங்கள்,” என்று ஜெய்சங்கர் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவித்தார்.

‘பாரத் கோ ஜானியே’ வினாடி-வினாவின் தொடக்கம், உலகளாவிய சமூகத்துடனான இந்தியாவின் தொடர்புகளை வலுப்படுத்தும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் என்பது அவற்றில் ஒன்றாகும்.

‘குளோபல் பிரவாசி ரிஷ்தா போர்டல்’ என்னும் மற்றொரு திட்டத்தின் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியத் தூதரகங்கள், இந்திய வெளியறவுத் துறை அமைச்சு ஆகிய மூன்று தரப்புகளுக்கிடையிலான இணைய வலைத் தளங்கள் மூலமான தொடர்புகள் உருவாக்கப்படுகின்றன.

‘பிரவாசி தீர்த் தர்ஷன் யோஜனா’ என்ற வெளியுறவு அமைச்சின் மற்றொரு திட்டம் சொந்தமாக இந்தியாவுக்கு ஆன்மீக யாத்திரை செல்வதற்கு வசதியில்லாத, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

பிரதமர் மோடி விவரிக்கும் இந்தியாவிற்கும் அதன் உலகளாவிய சமூகங்களுக்கும் இடையேயான “உயிரோட்டமான பாலங்கள்” என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க உதவுகின்றன.

வினாடி-வினா தற்போது https://bkjquiz.com என்ற இணையத் தளத்தில் நடத்தப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்களும், இணைத் தூதரகங்களும் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் வினாடி-வினாவில் பங்கு பெற்று தங்கள் இந்திய பாரம்பரியத்துடன் இணைய உதவும் வகையில் தங்கள் சமூக ஊடக தளங்களில் இதுகுறித்த விவரங்களை பகிர்ந்து வருகின்றன.