கதை என்னமோ அதரப் பழசு கதைதான். அதே கிராமத் திருவிழா – சாதாரண ஆட்டுக் கறி விருந்தின் போது எழும் சச்சரவுகள் – அதைத் தொடர்ந்து வெட்டு குத்து, கொலைகள் – இரண்டு தரப்பினரின் தீராப் பகை – இப்படித்தான் கதைப் பின்னியிருக்கிறார்கள்.


ஆனால், இந்த திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது வில்லியாக வரலட்சுமியின் மிரட்டல் நடிப்பும், இளமை கொஞ்சும் விளையாட்டுத் தனத்தோடு உலா வரும் கீர்த்தி சுரேஷின் சேட்டைகளும்தான். ராஜ்கிரண், விஷால் இடையிலான தந்தை – மகன் உறவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேவர் மகனை நினைவுபடுத்துகிறது.
கணவனை இழந்து விட்டு அதற்காகப் பழிவாங்க உருட்டும் விழிகளுடன், மிரட்டலான வசனங்களுடன், தலைவிரித்த கோலத்துடன் அசத்துகிறார் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி. தனது சிறு வயது மகனையும் கொலை உணர்வோடு பழக்கும் அளவுக்கு கொடூரத்தைக் காட்டி, சுற்றி நிற்கும் அத்தனை ஆண்களையும் சகட்டு மேனிக்கு கூர்மையான வார்த்தைகளால் போட்டுத் தாக்குகிறார். ஓர் உதாரணம் : “நீங்கள் எல்லாம் ஒங்க மனைவியோடு படுத்துத் தூங்கி எந்திரிக்கிறீங்க! நான் தனியாப் படுத்துத் தூங்கி எந்திரிக்கிறன்டா”.
செம்பருத்தியாக வரும், கீர்த்தி சுரேஷ் அழகாலும், தனது விளையாட்டுத் தனத்தாலும் கவர்கிறார். கிராமத்து நடையிலேயே பேசுவதும், கிராமத்துத் தலைவர் ராஜ்கிரண் மகன்தான் விஷால் எனத் தெரியாமல் கார் ஓட்டுநர் என நினைத்துக் கொண்டு கலாய்ப்பது இரசிக்கும்படி இருக்கிறது.
எப்போதும் முழுக்க மூடிய உடையோடும், கதாநாயகனிடமிருந்து சற்று தள்ளி நின்றும் காதல் செய்துவந்த கீர்த்தி சுரேஷ், இந்த முறை கொஞ்சம் நெருக்கமும், லேசான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷூக்கும் ராஜ்கிரணுக்கும் இடையிலான பாசமும் பரிவும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் சண்டைக்கோழி படத்தின் இரசிக்கும்படியான இன்னொரு கதாபாத்திரம் மீரா ஜாஸ்மின். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் காட்டாமல் தவிர்த்து விட்டார்கள். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த விஷால் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவுக்காக நாடு திரும்புவதாகக் கதை தொடங்குகிறது.
விஷாலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. திருப்திகரமான நடிப்பு. அவரது உயரத்துக்கும், உடல் கட்டமைப்புக்கும் யாரை ஓங்கி அடித்தாலும், நம்பும்படி இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை. கே.ஏ.சக்திவேலுவின் ஒளிப்பதிவும் தரமாக இருக்கிறது. படத்தில் பாதி திருவிழாக்காட்சிகள்தான். உண்மையிலேயே ஒரு திருவிழாவை நேரடியாகப் பார்ப்பது போல் இருக்கிறது.
சண்டைக்கோழி-2 ஏமாற்றாத பொழுது போக்குப் படம்!
-இரா.முத்தரசன்