கோலாலம்பூர் – உலகின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலியான மின்னல் பண்பலை (எப்.எம்) எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசிய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றை விருந்துபசரிப்போடு நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தியது.
கலைநிகழ்ச்சிகளோடும் மின்னல் பண்பலையின் நடப்பு நிகழ்ச்சிகள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றின் அறிமுகத்தோடும் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக அரங்கேறியது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்னல் பண்பலையின் நிர்வாகி எஸ்.குமரன் மின்னல் பண்பலை இதுவரையில் மேற்கொண்டு வந்திருக்கும் திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து விளக்கியதோடு ‘நேசிப்போம்’ என்ற தாரக மந்திரத்தின் மூலம் நேயர்களை ஒன்றிணைக்கும் பல்வேறு முனைகளிலான தங்களின் முயற்சிகள் வெற்றியடைந்து வருவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தங்களின் பணிகளில் எப்போதும் ஒத்துழைப்பும், விளம்பரமும் வழங்கி வந்திருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும், குமரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், மின்னல் பண்பலையின் வெற்றிக்காக நேரம், காலம் பாராமல் உழைக்கும் ஊழியர்களுக்கும் குமரன் தனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
நேற்றைய நிகழ்ச்சியின்போது மின்னல் பண்பலை தயாரித்திருக்கும் தீபாவளிப் பாடல் காணொளியாகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மின்னல் பண்பலையின் மற்ற நிகழ்ச்சிகள் குறித்த தொகுப்பொன்றும் இன்னொரு காணொளியாக ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்த தகவல் இலாகாவின் துணை இயக்குநர் துவான் ஹாஜி முயிஸ் மின்னல் பண்பலையின் முயற்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மின்னல் பண்பலையின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஊடகங்களின் பொறுப்பாளர்களுக்கும் தீபாவளிப் பலகாரங்கள் அடங்கிய நினைவுப் பரிசை ஹாஜி முயிஸ் எடுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களில் சிறந்த உடையலங்காரம் கொண்டவர்களை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. அந்தச் சிறப்புப் பரிசு கலைஞர் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயருக்கும், ‘மண்ணின் மைந்தன்’ குமரனுக்கும் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியின் ஊடே தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடனங்கள் இடம் பெற்றன.
இரவு விருந்துபசரிப்புடன் மின்னல் பண்பலையின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.