புதுடில்லி – இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களில் ஒருவரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவரும், மகாத்மா காந்தி, நேரு காலத்தின் சமகால அரசியல்வாதியுமான சர்தார் வல்லபாய் படேலின் உயரமான சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
உலகிலேயே மிக உயரமான சிலையான இந்த சிலை “ஒற்றுமை சிலை” (Statue of Unity) என அழைக்கப்படுகிறது. இந்த சில திறந்து வைக்கப்பட்ட பின்னர் இந்த சிலை அமைந்துள்ள பீடத்தில் ஒற்றுமை சிலை என்பதைக் குறிக்கும் வகைகளில் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழிமாற்றம் மிகக் கொடூரமான முறையில் கையாளப்பட்டுத் தற்போது தமிழக ஊடகங்களால் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.
இந்தியாவின் 22 அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று தமிழ். செம்மொழி என்ற பெருமையும் மத்திய அரசாங்கம் தமிழுக்கு வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், ‘ஒற்றுமை சிலை’ என மிக எளிமையாக மொழி பெயர்த்திருக்கக் கூடிய வார்த்தைகளை ஆங்கிலமும் இல்லாமல், தமிழும் இல்லாமல் இப்படி குழப்படியாக மொழி மாற்றம் செய்திருக்கின்றனர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்.
இதற்கிடையில் இதுகுறித்து விகடன் ஊடகம் அணுகியபோது பேசிய பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்றும் விரைவில் அந்தத் தமிழ் மொழிமாற்றம் மாற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
விரைவில், இந்த மொழிமாற்றக் குளறுபடி மாற்றப்படும் என தமிழகத் தரப்புகள் காத்திருக்கின்றன.