உதய்பூர் – நாளொன்றுக்கு சுமார் 20 விமான சேவைகளை மட்டுமே கொண்டிருந்த அரண்மனைகளும், கோட்டைகளும் நிறைந்த உதய்பூர் நகரின் விமான நிலையத்தின் சேவைகளின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமையன்று நான்கு மடங்காக உயர்ந்தது.
அந்தளவுக்கு உதய்பூர் பரபரப்பான நகராக மாறியிருக்கிறது.
அதற்குக் காரணம் – இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணம். அவரது மகள் இஷா அம்பானிக்கும், மற்றொரு கோடீஸ்வர வாரிசு ஆனந்த் பிரமலுக்கும் இடையிலான திருமணம் எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இப்போதே அதற்கான கொண்டாட்டங்கள், விருந்துகள் தொடங்கி விட்டன.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள உதய்பூர் வந்தடைந்து விட்டார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘சங்கீத்’ எனப்படும் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் பிரபல பாடகி பியோன்ஸ் தனது கவர்ச்சி நடனத்தை விருந்தினர்களின் பார்வைக்கு வழங்கியிருக்கிறார்.
வந்திருக்கும் விருந்தினர்களுக்கு ஒரு பிரத்தியேக குறுஞ்செயலி (மொபைல் எப்) இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் எங்கெங்கு விருந்துகள் நடைபெறுகின்றன, அன்றைய நிகழ்ச்சிகள் என்ன, கலைநிகழ்ச்சிகள் படைக்கப்போகும் நட்சத்திரங்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.