கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தீர்ப்பை எதிர்த்து அந்தத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் சிவராஜ் சந்திரன் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து நேரத்தை விரயமாக்குவதை விட்டு விட்டு நேரடியாக மக்களைச் சந்திக்கத் தாங்கள் முடிவு செய்துவிட்டதாக அறிவித்தார்.
இதன் மூலம், கேமரன் மலை நாடாளுமன்றத்தில் விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம்.
கேமரன் மலையில் பாரம்பரியப்படி மஇகாவே போட்டியிடும் என விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார். தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணி சார்பில் கேமரன் மலையில் ஜசெக போட்டியிடும் என்றும் அதற்கான வேட்பாளர் யார் என்பதை ஜசெக தலைமைத்துவமே முடிவு செய்யும் என அந்தக் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும், நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளர் அந்தக் கூட்டணியின் பொது சின்னத்தின் கீழ்தான் போட்டியிடுவார் என மகாதீர் அறிவித்திருக்கிறார்.
NEGERI | PAHANG |
---|---|
Parlimen | P.078 – CAMERON HIGHLANDS |
PARTI MENANG | BN |
MAJORITI UNDI | 597 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
MANOGARAN (PKR) | 9710 |
CIKGU WAN MAHADIR (PAS) | 3587 |
DATO’ SIVARRAAJH CHANDRAN (BN) | 10307 |
USTAZ TAHIR (BERJASA) | 81 |
SURESH KUMAR (PSM) | 680 |
மே 9 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சிவராஜ் 597 வாக்குகளில் வெற்றி பெற்றார்.
மஇகாவின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்திற்குப் பெரும் சவாலாகவும், மஇகா-தேசிய முன்னணி மீண்டும் எழுச்சி பெறுமா என்ற கேள்விக்கு விடையாகவும், கேமரன் மலை முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி இங்கு போட்டியிட்டு 3,587 வாக்குகளைப் பெற்றது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும். பாஸ் மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு தேசிய முன்னணிக்கும், மஇகாவுக்கும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மஇகாவுக்கு முன்பை விடக் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதுவே வெற்றிக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.
அதே சமயம் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இதுவரையில், தாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளில் மட்டுமே இடைத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று வந்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணி இப்போது முதன் முறையாக தேசிய முன்னணி கடந்த 4 பொதுத் தேர்தல்களில் 2004 முதல் வெற்றி பெற்று வந்திருக்கும் ஒரு தொகுதியில் இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
எனவே, இந்த முறை கேமரன் மலையைக் கைப்பற்ற நம்பிக்கைக் கூட்டணியும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.
14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தக்க வைத்துக்கொண்ட இரண்டே மாநிலங்களில் பகாங் மாநிலமும் ஒன்று என்பதால், இந்த மாநிலத்தின் கீழ் வரும் கேமரன் மலையில் மீண்டும் வெற்றி பெற மாநில அரசாங்க இயந்திரங்களும் மும்முரமாக ஈடுபடும்.
இந்நிலையில் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கேமரன் மலை வாக்காளர்கள் என்ன மனநிலையில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே கேமரன் மலையின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.