ஜோகூர், ஏப்ரல் 1 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தான் எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்றும், ஆனால் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் பொட்டியிடுவது உறுதி என்றும் ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜோகூர் வட்டாரங்களில், வரும் பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த லிம் கிட் சியாங்,
“நான் ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். வரும் பொதுத்தேர்தலில் நான் எந்த ஒரு சட்டமன்றத்திலும் போட்டியிடப்போவதில்லை, மாறாக கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன்” என்று கூறினார்.
மேலும், ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட போகும் வேட்பாளர் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஆனால் தற்போது ஜோகூர் மாநில ஜ.செ.க இளைஞர் அணியின் பிரச்சாரப்பிரிவு துணைத்தலைவராக இருந்து வரும் லியாவ் சாய் தங் (படம்) தான் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
27 வயதான லியாவ் சாய் தங் என்பவர் ஜோகூர் மாநில ஜ.செ.க மகளிர் அணியின் துணைத்தலைவி நங் சியாம் லுவாங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.