Home Photo News செல்லியல் பார்வை : லிம் கிட் சியாங்: ஒரு போராளியின் 56 ஆண்டுகால போராட்டப் பாதையில்…

செல்லியல் பார்வை : லிம் கிட் சியாங்: ஒரு போராளியின் 56 ஆண்டுகால போராட்டப் பாதையில்…

739
0
SHARE
Ad

(கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) நடைபெற்ற ஜசெக மாநாட்டில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியல் களத்தைச் செதுக்கியதில் லிம் கிட் சியாங்கிற்கு முக்கியப் பங்குண்டு. அவரின் கடந்த கால போராட்ட வாழ்க்கையின் சில சம்பவங்களை தன் பார்வையில் நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்)

1965-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து தனி நாடாக சிங்கப்பூர் ஆகஸ்டு 9 ஆம் தேதி பிரிகிறது. சிங்கப்பூரை லீ குவான் இயூ தலைமையில் ஆட்சி செய்த கட்சி பிஏபி.

1954ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிஏபி எனப்படும் ‘மக்கள் செயல்கட்சி’ 1964ஆம் ஆண்டில் மலேசியாவிலும் ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் தனிநாடாகப் பிரிந்துவிட்ட நிலையில் 9 செப்டம்பர் 1965 நாள் பிஏபி கட்சியின் பதிவும் மலேசிய அரசாங்கத்தால் ரத்து செய்யப்படுகிறது. அதே பெயரில் மலேசியாவுக்கான கட்சியாக பதிவு செய்ய அந்த கட்சியின் மலேசிய உறுப்பினர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தையும் மலேசிய அரசாங்கம் நிராகரித்தது.

அதைத் தொடர்ந்து பிஏபி கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை 11 அக்டோபர் 1965 அமைத்தனர். அந்த கட்சிக்கு ‘ஜனநாயக செயல் கட்சி’ (Democratic Action Party) எனப் பெயர் சூட்டினர்.
18 மார்ச் 1966ஆம் ஆண்டில் அந்த கட்சியை அதிகாரப்பூர்வமாக மலேசியச் சங்கப் பதிவகத்தில் பதிவு செய்தனர்.

அந்த கட்சியில் தனது 24ஆவது வயதில் இணைந்து கொண்டார் ஒரு பத்திரிகையாளரான லிம் கிட் சியாங்.
பத்திரிகைத் துறை அனுபவத்தால் ‘ராக்கெட்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார் லிம் கிட் சியாங். அப்படித்தான் தொடங்கியது அந்த அரசியல் போராளியின் ஒரு நீண்ட போராட்டப் பயணம்.

1966 முதல் 1969 வரை அந்த கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளராகவும் 1969 முதல் நீண்ட காலத்திற்கு தலைமைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் கிட் சியாங்.

அவர் கடந்து வந்த பாதை ஒரு சில சொகுசான அரசியல்வாதிகளின் வாழ்க்கையைப் போன்று அமையவில்லை. நாடாளுமன்றத்திலும் மக்கள் அரங்கத்திலும் பல பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டங்கள், அதற்காக நீதிமன்றங்களில் எண்ணிலடங்காத வழக்குகள், எல்லாவற்றுக்கும் மேலாக விசாரணை இல்லாத உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட சிறைவாசம் என ஒரு கரடுமுரடான போராட்டப் பயணத்தை அமைத்துக் கொண்டவர் லிம் கிட் சியாங்.

ஜசெ கட்சியையும் அத்தகையப் போராளிகளின் கூடாரமாக மாற்றி அமைத்தார். அவர் கடந்து வந்த பாதையில் சில வரலாற்றுப்பூர்வ சம்பவங்களைப் பார்ப்போம்.

பெரும் போராட்டத்தில் கட்சியைக் கைப்பற்றியவர்

லிம் கிட் சியாங் கட்சிக்கு வெளியே அரசாங்கத்திற்குப் பல போராட்டங்களை நடத்தியவர் மட்டுமல்ல. கட்சிக்குள்ளும் பல எதிர்ப்புகளை, போட்டிகளை சந்தித்தவர்.

கட்டங்கட்டமாக தனது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டி கட்சியை தனது முழு ஆதிக்கத்தில் கொண்டு வந்தவர். அவரோடு அரசியல் முரண்பாடு கொண்டிருந்த லீ லாம் தாய், கோ ஹொக் குவான் போன்றவர்களை காலப்போக்கில் கட்சியிலிருந்தே அகற்றினார்.

அவருக்குத் துணையாக இறுதிவரை தோள் கொடுத்துப் போராடியவர்களில் டாக்டர் சென் மான் ஹின், கர்ப்பால் சிங், பி. பட்டு, வி. டேவிட் ஆகியோர் முக்கியமானவர்கள்.

பெரும்பாலும் சீன சமூகத்தின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்த கட்சி என்ற தோற்றத்தை ஜசெக ஏற்படுத்தியிருந்தது. அதைக் கட்டங்கட்டமாக மாற்றி அமைத்து இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் உரிய அரசியல் பங்களிப்பை லிம் கிட் சியாங் வழங்கினார்.

ஜசெகவில் அவர் ஏற்படுத்திய மிகப் பெரிய சீர்திருத்தம்– சித்தாந்த மாற்றம் என இந்த ஓர் அம்சத்தை மட்டும் தனியாகக் குறிப்பிடலாம்.

அவர் தனது மகன் லிம் குவான் எங்கை கட்சிக்குள் முக்கியப் பொறுப்புகளுக்குக் கொண்டு வந்தபோது, குடும்ப அரசியலை முன்னெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆனால், இப்போது 56 ஆண்டுகால அரசியல் பயணத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் முடிவை அவர் எடுத்திருக்கும் இதே தருணத்தில் அவரது மகன் லிம் குவான் எங்கும் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

தந்தை, மகன் இருவரின் வழிகாட்டுதல்களும் இல்லாமல் ஜசெக இனி எந்தத் திசையில் பயணம் செய்யும் என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இருவரின் ஆதிக்கமும் ஏதோ ஓர் உருவத்தில் கட்சிக்குள் ஊடுருவலாகவும் ஆதிக்கமாகவும் தொடர்ந்து இருந்துவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர்

1969ஆம் ஆண்டில் பண்டார் மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிட் சியாங். அப்போது தொடங்கி 1999ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாக அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும், 2004ஆம் ஆண்டில் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

இத்தனை ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல் சுமார் 5 ஆண்டு கால இடைவௌியில் மூன்று முறை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

2008ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னதாக பல தருணங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக லிம் கிட் சியாங் பணியாற்றினார்.

கிட் சியாங்கின் நாடாளுமன்ற வரலாற்றில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. ஒரே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படாமல் வெவ்வேறு பொதுத் தேர்தல்களில் வெவ்வேறு தொகுதிகளில் மலாக்கா, சிலாங்கூர், பினாங்கு, பேராக், ஜோகூர் போன்ற மாநிலத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிட் சியாங்.

சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் மலாக்கா, பினாங்கு மாநிலங்களிலிருந்து பல தவணைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத விதமாக ஜோகூர் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.

2018 பொதுத் தேர்தலில் ஜோகூரின் இஸ்கண்டார் புத்ரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டில் ஜோகூர் மாநிலத்தையும் ஜசெக உறுப்பிய கட்சியாக இருக்கும் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியது.

விடா முயற்சியின் நாயகன்– சளைக்காத உழைப்பாளி

லிம் கிட் சியாங்கின் அரசியல் பயணத்தில் இன்றைய இளம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய பாடங்கள், படிப்பினைகள் இருக்கின்றன.

விடா முயற்சி என்பதற்கு உதாரணம் லிம் கிட் சியாங். பினாங்கு மாநிலத்தை கெராக்கான் கட்சியிடமிருந்து கைப்பற்றுவதே தனது லட்சியம் என்ற முழக்கத்தை எப்போதும் முன் வைத்தவர் அவர். அதற்காக ‘தஞ்சோங் திட்டம்’ என்ற அரசியல் வியூகத்தையும் அவர் அறிவித்தார்.

ஆனால், பல பொதுத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். பினாங்கைக் கைப்பற்றும் அவரது கனவு நனவாகாமலேயே தொடர்ந்தது. இருந்தாலும் ஒவ்வொரு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னரும் தஞ்சோங் 2. தஞ்சோங் 3 என அடுத்தடுத்து பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றும் தனது விடா முயற்சியை அவர் கைவிடவில்லை.

இறுதியில் 2008ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிமின் கட்சியுடன் கைகோத்து அவர் பினாங்கைக் கைப்பற்றினார்.
அவர் நினைத்திருந்தால் அப்போதே அவர் பினாங்கு முதல்வராகி இருக்கலாம். ஆனால், தனது மகன் லிம் குவான் எங்கிற்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.

2018ஆம் ஆண்டிலும் பக்காத்தான் அரசாங்கம் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தபோது, அவர் நினைத்திருந்தால் அமைச்சராகி இருக்கலாம்.

ஆனால், தனது மகனையும் மற்ற ஜசெக தலைவர்களையும் அமைச்சர்களாக்கி அழகுபார்த்து ஒரு மூத்த வழிகாட்டுதல் தலைவன் போன்று ஒதுங்கிக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் காலத்தில் அவர் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர் பிரச்சாரம் சளைக்காமல் செய்வார்.

இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்தில் அவர் ஏறத்தாழ தினமும் ஏதாவது ஓர் அறிக்கை, கட்டுரை அல்லது கருத்து ஒன்றை தனது வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டு வந்துள்ளார்.

அது மட்டுமல்ல, சொந்த கல்வித் தகுதியையும் உயர்த்திக் கொள்ள அவர் உழைத்தார். நாடாளுமன்றம், கட்சி, அரசியல் களம் என அயராதப் போராட்டத்திலும் பகுதி நேரமாக சட்டக் கல்வி படித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியானார்.

1977ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள லிங்கன்ஸ் இன் சட்டக் கல்லூரி வழியாக வழக்கறிஞராக அவர் தேர்வு பெற்றார்.
இருந்தாலும் அவர் நீதிமன்றம் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றவில்லை.

அவரின் கடுமையான உழைப்பு இன்றைய அரசியல்வாதிகள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியப் பாடம்.
இன்னொரு பாடம். எத்தகையப் போர்க்களமாக இருந்தாலும் எத்தகையப் பிரச்சினையாக இருந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் போராடும் அவரின் பாணி!

அதற்காக அவர் எத்தனையோ நீதிமன்ற வழக்குகளை அரசாங்கத்திடமிருந்து சந்தித்திருக்கிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

அதே வழியில் அவரின் மகன் லிம் குவான் எங்கும் மலாக்கா மாநிலத்தில் ஓர் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் போராடியதில் 18 மாதச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்.

லிம் கிட் சியாங்கின் கனவு ‘மலேசியர்களுக்கான மலேசியா’ என்பதாகும். இனபேதமின்றி மத வித்தியாசமின்றி ஒவ்வொரு மலேசிய குடிமகனும் மலேசியாவை தனது தாய் நாடாகக் கொள்ளவேண்டும். அதற்கேற்ப அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும் எனும் போராட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் முன்னுதாரணமாக முன்னெடுத்தவர் லிம் கிட் சியாங்.

அவரது போராட்ட இலக்குகளில் சிலவற்றை அவர் அடையாமல் போய் இருக்கலாம். ஆனால், இன்றுவரை மலேசியாவில் நாம் அடைந்திருக்கும் கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவையெல்லாம் நாம் இன்று அனுபவிப்பதற்கு தியாகங்கள் செய்து போராடி பாதை அமைத்துத் தந்தவர்களில் லிம் கிட் சியாங்கும் ஒருவர்.

எதிர்காலத்தில் அவர் கண்ட கனவுகளில் சிலவற்றை மலேசியர்கள் நடைமுறையில் அனுபவிக்கக்கூடும்.
அந்த வகையில் லிம் கிட் சியாங் மலேசிய வரலாற்றிலும் இன்றைய, நாளைய நடுநிலை மலேசியர்களால் எப்போதுமே நன்றியுடன் நினைவுகூரப்படுவார்.