சென்னை: நீட் தேர்வை இரத்து செய்யவும், கல்வியை தமிழ் நாடு மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் திமுக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இக்கல்வி முறையானது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் மன அழுத்தத்தையும், உளைச்சலையும் தருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்திருந்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கேள்விக்கு திருப்திகரமான பதிலில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியை, பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் போது ஏற்றத்தாழ்வுகள் போன்ற சூழல்கள் நீங்கும் எனவும் சொந்த மாநிலத்தில் மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அதனால், நீட் தேர்வை இரத்து செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு, நீட் தேர்வே இல்லாத நிலையை உருவாகக் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். அனைத்து மாநிலங்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு இரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில் கொண்டு, செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.” என்று அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் போர் தொடுக்க தூண்டியுள்ளது.