புது டில்லி: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த வழக்குகள் அக்டோபர் மாதம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்குகள் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சீதாராம் யெச்சூரி தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்திக்க விரும்பும் மாணவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆகியோர் காஷ்மீருக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், அரசியல் தலைவர் ஒருவர் காஷ்மீருக்கு செல்வது என்பது அங்கு பிரச்சனையை மேலும் தீவிரம் அடையச் செய்யும் எனவும் யெச்சூரியை காஷ்மீர் செல்ல அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் யெச்சூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.