கோலாலம்பூர்: முஸ்லிம் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட பிரச்சாரத்தை, இனவெறியுடன் இணைத்த பல அரசியல்வாதிகள் மீது உம்மா அமைப்பு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உம்மா தலைவர் அமினுடின் யஹாயா கூறுகையில், இந்த பிரச்சாரம் முஸ்லிம் வணிகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும், சந்தைப்படுத்தல் திறன் இல்லாமை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முஸ்லிம்களின் பொருட்களுக்கு இடமில்லை என்ற காரணத்தினால்தான் இது தொடங்கப்பட்டது என்றும் கூறினார்.
முன்னதாக, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், எந்தவொரு கட்சிக்கும் எதிரான எந்தவொரு புறக்கணிப்பு பிரச்சாரமும் பயனற்றது என்றும், அது ஒரு சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
“பல தயாரிப்புகள் சந்தேகத்திற்குரியவையாக இருக்கிறது. உம்மா பிரச்சாரம் முஸ்லிம் ஹலால் உணவுப் பொருட்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது” என்று அமினுடின் கூறினார்.
“இது முஸ்லிம்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் உண்ணும் உணவு அவர்களின் வழிபாட்டை பாதிக்கும். எனவே இந்த பிரச்சாரம் அவர்களுக்கு ஒரு நியாயமான தயாரிப்பைப் பெற உதவுவதாகும். இதனால் முஸ்லிம் தொழில்முனைவோர் இதர தொழில்முனைவோருடன் இணைந்து உயரே நிற்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த பிரச்சாரம் தொடங்கியதாகவும், ஆனால் சமூக ஊடகங்களில் தவறான புரிதல்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளைத் தொடர்ந்து தற்போது அது சீற்றம் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
உம்மா இந்த மாதத்திலிருந்து தொடர் சுற்றுப்பயணங்களையும் தொடங்கும் என்றும், இது தொடர்பான பிரச்சாரம் அக்டோபர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்..