Home One Line P1 “சாதிப்பேன் என்ற எண்ணத்துடன் தேர்வு எழுதுங்கள்” – யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு சேவியர் வாழ்த்து

“சாதிப்பேன் என்ற எண்ணத்துடன் தேர்வு எழுதுங்கள்” – யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு சேவியர் வாழ்த்து

841
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“நாடெங்கும் யூபிஎஸ்ஆர் சோதனைக்குத் தயாராகிவரும் மாணவர்கள் தேர்வில் சிறந்த தேர்ச்சியை அடைய என் வாழ்த்துகள். வாழ்வில் மாணவப் பருவம் என்பது விலை மதிப்பற்ற ஒருயுகம். அதனை ஒவ்வொரு மாணவனும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் (A) ஏ’க்களை குவிக்கப் பாடுபடும் வேளையில், கல்வியில் மந்தமான மாணவராக எண்ணிக்கொண்டு எவரும் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது” என்றும் சேவியர் ஜெயகுமார் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மாணவப் பருவத்தில் இது போன்ற தேர்வு நேரங்களில் மாணவர்கள் உற்சாகமாகப் படிக்கவேண்டும், வெற்றி நிச்சயம், என்னால் முடியும், நான் சாதிப்பேன் என்ற எண்ணத்துடன் தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதுங்கள் என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“போட்டிகள் நிறைந்த உலக வாழ்க்கைக்குப் பிள்ளைகளைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றுதான் இத்தேர்வு என்பதால் நமது பிள்ளைகள் வீண் பயம் கொள்ளக்கூடாது. கல்வியின் நீண்டதூரப் பயணத்தின் முதல் படியே யூபிஎஸ்ஆர் சோதனை. இதில் பெறும் அனுபவமே வெற்றியின் முதல்படி பள்ளி வாழ்வில் மேலும் உயர உங்களுக்கு உற்சாகம் தரும் வழி” என்றும் சேவியர் மேலும் கூறினார்.

“ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வரும் குற்றச்செயல்களும் நமது சமுதாயத்தில் நடைபெற்று வரும் வெட்டுக் குத்துகளும் உயிர் இழப்புகளுக்கும் மிக முக்கியக் காரணமாக இருப்பது கல்வி மற்றும் பொருளாதாரத் தோல்வியே என்பதனை யூபிஎஸ்ஆர் சோதனைக்கு அமரும் எல்லா மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் குறிப்பாகக் கல்வியில் வெற்றி கண்டோர் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடு படுவது மிகக் குறைவு. ஆகவே கல்வியில் உயர்ந்து, உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும் மாணவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.

சமீப ஆய்வில் 47 விழுக்காடு இந்தியர்கள் ஒரே மொழிக்கல்விக்கு ஆதரவளிப்பதாக வந்த செய்தியை தவறென நிரூபிக்க, தாய் மொழிப் பள்ளி மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒரு பிரத்தியேக சவாலை எதிர் கொள்ள முன் நிற்க வேண்டும் என்று கூறிய சேவியர் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி மாணவரும் இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் சோதனை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

“யூபிஎஸ்ஆர் தேர்வில் நீங்கள் பெறும் வெற்றிகள் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி காட்டுவதாக இருக்க வேண்டும். நீங்கள் பெறும் வெற்றிகள் உங்களை மட்டும் உயர்த்துவதில்லை, மாறாக நம் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நம் நாட்டில் பீடு நடைப் போட வழிவகுக்க வேண்டும்” எனவும் சேவியர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.