கோலாலம்பூர்: விசாரணைக்கு உதவ முன்வருமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாரக்கை சிலாங்கூர் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் தாம் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக பார்ஹாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, இரவு 9 மணியளவில் அம்பாங்கில் உள்ள அரெனா ஆல் ஸ்டார்ஸ் விளையாட்டு வளாகத்தில், ஆயுதம் ஏந்திய கும்பலுடனான கைகலப்பு விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 12 முதல் 14 நபர்கள் வரை சம்பந்தப்பட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்சில் அகமட் தெரிவித்துள்ளார்.
“ஒரு மலாய்க்கார ஆண், புகார்தாரருடன் மோதியது, புகார்தாரரின் முகத்தைத் தொடர்ந்து தள்ளியதும் இந்த சம்பவம் தொடங்கியது. இது தொடர்பாக ஒரு கலவரம் ஏற்பட்டது. நிருவாகம் அவர்களை அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. புகார்தாரர் விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, 10 பேர் கொண்ட குழு தாக்க முன்வந்ததுள்ளனர்,” என்று பாட்சில் கூறினார்.
புகார்தாரரின் நண்பர்கள் மூன்று பேர் சம்பவத்தை நிறுத்த முயன்ற போதிலும், புகார்தாரர் தலைக்கவசம், கத்தி மற்றும் நாற்காலியால் தாக்கப்பட்டதாக பாட்சில் கூறினார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இடுப்பு பகுதியில் கிழிந்த காயங்கள், கைகால்களில் காயங்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
“இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர்களில் ஒருவரான 37 வயதான பார்ஹாஷ் வாபா சால்வடார், விசாரணைக்கு உதவுமாறு காவல் துறையினர் கேட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தாம் ஒரு சண்டையில் ஈடுபட்டதாக இழிவான செய்தி அரசியல் பின்னணியால் பரப்பப்பட்டு வருவதாக பார்ஹாஷ் சினார் ஹரியானிடம் குறிப்பிட்டதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.