கோலாலம்பூர்: கடந்த மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) கணினி முறை இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) ஊழியர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்நான்கு நபர்கள் எம்ஏஎச்பி உடன் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டுள்ளனர் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த நிருவாகத்தினர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த புகார் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நான்கு ஊழியர்களும் தொழில்நுட்ப இடையூறு விசாரணைக்கு உதவ காவல் துறையினரால் அழைக்கப்பட்ட 12 எம்ஏஎச்பி அதிகாரிகளில் இடம்பெற்றுள்ளனர்.
கணினி முறை இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான பயணிகள் கேஎல்ஐஏயில் சிக்கித் தவித்தனர்.