Home One Line P1 சேவியர் ஜெயகுமார் : ஒரு போராளி வீழ்ந்த கதை

சேவியர் ஜெயகுமார் : ஒரு போராளி வீழ்ந்த கதை

1159
0
SHARE
Ad

(பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராகவும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சேவியர் ஜெயகுமார். முன்னாள் அமைச்சராகவும், சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.  சேவியர் ஜெயகுமார் கடந்த மார்ச் 13-ஆம் தேதி பாதை மாறி பிகேஆர் கட்சியிலிருந்து விலகி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பிரதமருக்கு ஆதரவு என அறிவித்தார். அவர் பிகேஆர் கட்சியிலிருந்து வந்து சேர்ந்த கதை – அரசியலில் வளர்ந்த கதை – இறுதியில் அரசியல் போர்க்களத்தில் நெருக்கடிகள் காரணமாக வீழ்ந்த கதையையும் மேற்கண்ட காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். அந்தக் காணொலியின் கட்டுரை வடிவம் பின்வருமாறு:)

மலேசிய அரசியலில் எது வேண்டுமானாலும் இனி நடக்கலாம் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் சேவியர் ஜெயகுமாரின் அண்மைய அதிரடி கட்சி மாற்றம்!

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தவர், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் என பல பதவிகளை வகித்தவர் சேவியர். தற்போது கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.

தேசியக் கூட்டணியையும், மொகிதின் யாசினையும் பல தருணங்களில் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட அவரே, மார்ச் 13-ஆம் தேதி தலைகீழ் மாற்றமாக, பிகேஆர் கட்சியிலிருந்து அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியிருக்கிறார். பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருக்கிறார்.

அதனால்தான் அரசியல் வட்டாரங்களில் இந்த அளவுக்கு அதிர்ச்சி அலைகள் எழுந்துள்ளன. தொடர்ந்து தனது பதவி விலகலுக்கான காரணத்தை மேலும் விளக்க சேவியர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஒருகாலத்தில் பிகேஆர் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலியோடும் நெருக்கமாக அரசியல் பணியாற்றிவர்தான் சேவியர். எனினும் ஷெராட்டான் நகர்வு மூலமாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த அஸ்மின் அலியை அடிக்கடி கடுமையாகச் சாடியவர்.

இப்படியாக ஒரு போராளியாக பிகேஆரில் வலம் வந்த சேவியர் கட்சி மாறி வீழ்ந்த கதைக்குள் செல்வோம். அதற்கு முன்னால் அவர் பிகேஆர் கட்சிக்குள் வந்த கதையையும் வளர்ந்த கதையையும் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

1998-இல் அரசியல் பிரவேசம்

சேவியர் ஜெயகுமார் அருளானாந்தம் என்ற முழுப் பெயரைக் கொண்ட சேவியர் ஒரு பல் மருத்துவர்.

1998-ஆம் ஆண்டில் துன் மகாதீரால் அன்வார் இப்ராகிம் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல், ஓரினச் சேர்க்கை வழக்குககளும் அன்வார் மீது சுமத்தப்பட்டன.

அப்போது நாடெங்கிலும் அன்வாருக்கு ஆதரவாக ஓர் எழுச்சி அலை எழுந்தது. பல இனங்களையும் சார்ந்தவர்கள், பல்வேறு தொழில் துறை சார்ந்தவர்கள்  அன்வாருக்காக குரல் கொடுக்கவும் போராடவும் முன்வந்தார்கள்..

ரிபோர்மாசி என்ற பெயரில் மறுமலர்ச்சி இயக்கமாக உருவாகிய அன்வாரின் ஆதரவுக் குழுதான் பின்னர் பிகேஆர் கட்சியாக உருவெடுத்தது.

அப்போது முதல் அந்த இயக்கத்திலும் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் சேவியர்.

அந்த வகையில் அவர் ஒரு துணிச்சலான, தன்னலமற்ற போராட்ட அரசியல்வாதியாகத்தான் உருவெடுத்தார்.

காரணம், அன்வார் அப்போது சிறையில் இருந்தார். சேவியர் போன்ற பலருக்கு அவருடன் நேரடித் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. அன்வார் தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படலாம் என்ற சூழலும் இருந்தது. அத்தகைய நிச்சயமற்ற, எதிர்காலமே சூன்யமாகத் தெரிந்த ஓர் இயக்கத்தில் நம்பிக்கையோடு இணைவதற்கும் ஒரு துணிச்சல், கொள்கைத் தெளிவு வேண்டும்.

பல்மருத்துவராக நிம்மதியான வாழ்க்கையைத் தொடர்வதற்குப் பதிலாக அன்வாருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார் சேவியர். தொடர்ந்து பல ஆண்டுகள் போராடினார்.

அந்தக் கொள்கைப் போராட்டத்திற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சேவியர்.

எனினும் சேவியர் உள்ளிட்ட பிகேஆர் போராளிகளின் போராட்டத்திற்கான விடியலுக்கான வெளிச்சம் 2006-இல் சற்றே தெரியத் தொடங்கியது.

அன்வார் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தார்.

2008 பொதுத் தேர்தலில் அன்வார் கட்டமைத்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிகேஆர் சார்பாக சிலாங்கூரில் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் சேவியர்.

தன் துணைவியாருடன் சேவியர் ஜெயகுமார்

10,203 வாக்குகள் வித்தியாசத்தில் அந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடினார் சேவியர். அந்த 2008 பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தையும் கைப்பற்றியது அன்வார் தலைமையிலான அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணி.

அதைத் தொடர்ந்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக இந்தியர்களின் சார்பில் நியமிக்கப்பட்டார் சேவியர். அந்தப் பதவியை வகித்தபோது சிலாங்கூரில் இந்தியர்களின் ஆலயங்களுக்கான நிலங்கள், தமிழ்ப் பள்ளிகள் பிரச்சனைகள் என பல விவகாரங்களை வெற்றிகரமாகக் கையாண்டார் சேவியர்.

தொடர்ந்து 2013-ஆம் ஆண்டிலும் அதே ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்த முறை 15,633 வாக்கு வித்தியாசத்தில் முன்பைவிட அதிகமான பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடினார்.

எனினும் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினர் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. 2008 பிகேஆர் கட்சிக்கு வழங்கப்பட்ட இந்திய பிரதிநிதித்துவத்துக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி 2013-இல் ஜசெகவுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி வீ.கணபதிராவ் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது இரண்டாவது தவணையாக அந்தப் பதவியை வகிக்கிறார் கணபதி ராவ்.

2018 பொதுத் தேர்தலில் சிலாங்கூர், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட அன்வார் இப்ராகிம் சேவியருக்கு வாய்ப்பளித்தார். சேவியரும் அந்தத் தேர்தலில் 17,112 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து துன் மகாதீரின் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் நீர்,நிலம், இயற்கை வளம் அமைச்சராகப் பொறுப்பேற்றார் சேவியர்.

இரண்டே ஆண்டுகளில் 2020 பிப்ரவரியில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சேவியரும் பதவி இழந்தார்.

எனினும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராகவும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்தார். நம்பிக்கைக் கூட்டணியின் முன்னணிப் போராளிகளில் ஒருவராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் சேவியர்.

ஆனால், அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது பிகேஆர் கட்சியிலிருந்து விலகி மொகிதின் யாசினின் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருக்கிறார்.

அதற்குக் காரணமாக, தற்போது பொதுத் தேர்தல் தேவையில்லை என்று கூறுகிறார் சேவியர்.

மேலும், கொவிட்-19 பாதிப்பு காலகட்டத்தில் நாம் அரசாங்கத்திற்கு ஒருமனதுடன் ஆதரவு தர வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைத்திருக்கிறார் சேவியர்.

அவரின் முடிவு குறித்து பல்வேறு ஆரூடங்கள், ஊகங்கள் நிலவுகின்றன.

ஓரிரு வாரங்களுக்கு முன்னால் அவர் மீதான ஊழல் புகார்களை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கத் தொடங்கியது.

அவர் மீது தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் கொடுத்த அழுத்தம்தான் அவரின் பதவி விலகலுக்குக் காரணம் என்கிறார் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன்.

குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்றால் சேவியர் துணிச்சலுடன் எதிர்கொண்டு ஊழல் வழக்கைச் சந்தித்திருக்கலாமே, எனக் கேள்விக்கணைகள் தொடுத்திருக்கிறார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி.

சேவியரின் கொள்கை மாற்றத்திற்கும், அதிரடி கட்சி மாற்றத்திற்கும் காரணம் எது என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

அந்தக் காரணம் எதுவாக இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்போடு ஒரே எதிர்க்கட்சியின் மூலமாகப் போராடிய ஒரு போராளியான சேவியர் ஜெயகுமார்  அதே அரசியல் போராட்டக் களத்தில் ஆளும் கட்சியிடம் இறுதியில் வீழ்ந்தது ஒரு சோகம்தான்!

-இரா.முத்தரசன்