கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழகம் அதன் இணைய மின் கட்டண இணைப்பு ஊடுருவப்பட்டதில் அதன் எந்தத் தரவும், தகவலும் பாதிக்கப்படவில்லை என்று கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதன் ஊழியர்களின் தனிப்பட்ட தரவு, உள்நுழைவு அடையாளங்கள் மற்றும் கடவுச்சொற்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப தளமான லோவ்யாட்.நெட் (lowyat.net) நேற்றிரவு வெள்ளிக்கிழமை கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள், சம்பள துண்டுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஒரு கோப்பு பகிர்வு தளத்தில் கசிந்ததாக தெரிவித்துள்ளது.
கசிந்த தரவுகளில், மலாயா பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பள தகவல்கள் இருந்ததாகவும், இதில் தனிப்பட்ட வங்கி பெயர்கள் மற்றும் வங்கி கணக்கு எண்களும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வங்கி கணக்கு எண்கள் ஊழியர்களின் பெயர்கள், மை காட் எண்கள் மற்றும் பணியாளர் அடையாள எண்களுடன் பொருந்தின.”
மேலும், 24,000 உள்நுழைவு அடையாளங்கள் மற்றும் மலாயா பல்கலைக்கழக இணைய மின் கட்டண இணைப்பிலிருந்து வந்ததாக நம்பப்படும் கடவுச்சொற்களும் வெளியிடப்பட்டுள்ளது. கசிந்த கோப்புகளில் கடவுச்சொற்கள் மற்றும் தரவுத்தள நற்சான்றிதழ்கள் இருப்பதாகக் கூறப்படுவதால், அதிகமான மாணவர்களின் தரவுகள் கசியலாம் என்று அத்தளம் மேலும் எச்சரித்தது.
நேற்று ஓர் அறிக்கையில், அதன்இணைய மின்கட்டண தளம் ஊடுருவப்பட்டது குறித்து மலாயா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
“இந்த சம்பவத்திலிருந்து தரவு அல்லது தகவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மேலும் பல்கலைக்கழக தகவல் அமைப்பு தடயவியல் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது” என்று மலாயா பல்கலைக்கழகம் கூறியது.
ஆயினும், மலேசியாகினியின் தகவலின்படி, பல்கலைக்கழகத்தின் இணைய மின் கட்டண தளம் இன்னும் அணுக முடியாமல் இருப்பதாகக் கூறியது.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஷா அலாமில் நடைபெற்ற மலாய் தன்மான காங்கிரசில், மலாயா பலகலைக்கழக துணைவேந்தர் அப்துல் ராகிம் ஹாஷிமின் சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்து இம்மாதிரியான மறைமுகத் தாக்குதலகள் நடத்தப்பட்டு வருகிறது.