கோலாலம்பூர்: மக்களவையில் 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தாம் நினைவூட்டி உள்ளதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் அதிகமான பணி சுமையைக் கருத்தில் கொண்டபோதும் இந்த நினைவூட்டல் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் இந்த விவகாரத்தை அமைச்சரவையுடன் ஆழமாக விவாதித்துள்ளோம். சில நேரங்களில், அமைச்சர்கள், வெளிநாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். அவர்கள் பல அனைத்துலக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நேரங்களில் அவையில் இருபதில்லை. ஆனால், இந்த கட்டிடத்தில் (நாடாளுமன்றம்) அவர்கள் இருந்தால், அவர்களை மணி எழுப்பி அழைக்கலாம்.” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மக்களவையில் நடந்த விவாதத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகையில், 2020-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அமரத் தவறியது, அவர்கள் விவாதத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறியிருந்தார்.