கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலில் பிடிபிடிஎன் குறித்து தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் சாக்கு போக்கு கூறி வருவதை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மற்றும் இரண்டு தரப்பினர் மீது ஐவர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு 4,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு தேசிய கல்வி கல்வி நிதி கடனை செலுத்துவதை தாமதப்படுத்துவது இதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து பிடிபிடிஎன் கடன் பெறுனரும் பிடிபிடிஎன், நம்பிக்கைக் கூட்டணி மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல் செய்தனர்.
ஆண்ட்ரி புத்ரா ஹாரிஸ் (28), பாரா அதிரா கமரோசமான் (27), முகமட் அஸ்ரோல் முகமட் ஜெய்லானி (26), முகமட் முசாக்கிர் முகமட் அலி (26), மற்றும் முகமது அஸ்வத் சோப்ரி (34), ஆகியோர் இம்மூன்று தரப்புக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இம்மூன்று பிரதிவாதிகளும் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை நிறைவேற்ற ஒப்பந்த அடிப்படையில் கட்டுப்பட்டதாக ஐந்து நபர்களும் கூறினர்.
மலேசியர்கள் இந்த வாக்குறுதியை உண்மையாகவும், நிறைவேற்றப்படும் என்றும் நம்பினர். தேர்தல் அறிக்கையில் உள்ளபடி நிறைவேற்றப்படாவிட்டால், குறிப்பாக வாக்காளர்களின் நம்பிக்கை இழக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது உட்பட, நம்பிக்கைக் கூட்டணி 100 நாட்களுக்குள் நிறைவேற்றும் என்று பத்து வாக்குறுதிகளை வெளியிட்டதையும், அவர்கள் எழுப்பினர்.
இளைஞர்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான ஐந்தாவது உறுதிமொழி மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான 50-வது வாக்குறுதியாக நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ரி, பாரா, அஸ்ரோல், முசாக்கிர் மற்றும் அஸ்வத் ஆகியோர் கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்திருந்தாலும், இன்னும் அவர்களின் வாக்குறுதி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டன அல்லது புறக்கணித்து விட்டன என்று கூறினர்.
நம்பிக்கைக் கூட்டணியின் உறுதிமொழியும், தேர்தல் அறிக்கையும் தேர்தலில் வெற்றிபெறும் அரசியல் கட்சிகளை பிணைக்கும் ஒப்பந்தங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று வாதிகள் கோருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு 4,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைத்து கடன் பெறுனருக்கும், அக்கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.