கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலின் தவணை முடியும் வரையிலும் மகாதீர், பிரதமர் பதவியை வகிக்கட்டும் என்ற தமது நிலைப்பட்டை பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் மகாதீரின் இரண்டு வருட கால அவகாசத்திற்குப் பிறகு பிரதமராக பதவி ஏற்பார் என்ற நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமித்த கருத்துக்கு இது முற்றிலும் மாறுபட்டதாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் பொறுப்பேற்க விரும்புவோரே, பின் புறமாக அரசாங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று அஸ்மின் கூறினார்.
“வேறு வழிகள் இல்லாத குழுவின் அறிக்கையாக பார்க்கிறேன். ஜனநாயக அமைப்பை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், மக்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு அரசாங்கத்தையோ அல்லது பிரதமரையோ தேர்வு செய்கிறார்கள்.”
“ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் அல்லது ஒரு வருடத்திற்கும் ஒரு முறை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நாங்கள் எங்கே நடத்துகிறோம்? ஆகவே, அதிகாரத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை மதிப்பார்கள் என்று நம்புகிறேன்.”
“டாக்டர் மகாதீர் பிரதமராக இருக்க வேண்டும்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.