கோலாலம்பூர்: வெறுமனே மத மற்றும் இனப் பிரச்சனைகள் ஆதிக்கம் செலுத்தும் பதிவுகள் அல்லது செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்கள் இருப்பைத் தொடர்வதற்காக, வாசகர்களை ஈர்க்க ஊடகங்களில் இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு தேவைப்படுவதாகவும், அதே நேரத்தில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு பொறுப்பாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி நாட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்றதிலிருந்து இஸ்லாமிய நிருவாகம், மத மற்றும் இனப்பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளது.” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் ஊடகங்களுடனான விருந்தில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அரசாங்க கொள்கைகள் குறித்த போலி செய்திகளை பரப்புவதில் அச்சு ஊடகங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முஜாஹிட் கூறினார்.
“சமூக ஊடகங்களின் சூழல் மிகவும் வித்தியாசமானது. தலைப்பை மட்டுமே மக்கள் வாசித்து, அடிமட்டத்தை (உள்ளடக்கத்தை) படிக்க மாட்டார்கள். அதனை சரிசெய்வது எங்களுக்கு கடினம். இதை சரிசெய்வதில் பிரதான ஊடகங்கள் தங்களின் பங்கை வகிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.