Home நாடு அமானா: முகமட் சாபு மீண்டும் தலைவர் – முஜாஹிட் புதிய துணைத் தலைவர்

அமானா: முகமட் சாபு மீண்டும் தலைவர் – முஜாஹிட் புதிய துணைத் தலைவர்

387
0
SHARE
Ad
முகமட் சாபு – முஜாஹிட் யூசோப் ராவா

கிள்ளான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) நடைபெற்ற அமானா கட்சியின் தேர்தலில் முகமட் சாபு 3-வது தவணைக்கு மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலமான முன்னாள் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப்புக்கு பதிலாக புதிய துணைத் தலைவராக முஜாஹிட் யூசோப் ராவா தேர்ந்தெடுக்கப்பட்டார். வலுவான இஸ்லாமிய அறிவாற்றல் கொண்ட முஜாஹிட் யூசோப் ராவா, பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஹாஜி யூசோப் ராவாவின் மகனாவார். இந்தப் பின்னணி காரணமாக பாஸ் கட்சியை பிரச்சார ரீதியாக எதிர்கொள்ளும் ஆற்றலை அவர் கொண்டிருப்பார் எனக் கருதப்படுகிறது.

முஜாஹிட் யூசோப் ராவா இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அமானாவின் புதிய உதவித் தலைவர்கள்

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், டாக்டர் சித்தி மாரியா மாஹ்முட், அட்லி சஹாரி ஆகியோர் முறையே 3 உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுல்கிப்ளி கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராவார். சித்தி மாரியா கோத்தா ராஜா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். அட்லி சஹாரி தற்காப்புத் துறை துணையமைச்சராவார். மலாக்கா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமாவார். சித்தி மாரியாவும், அட்லியும் ஏற்கனவே உதவித் தலைவர்களாக இருந்தவர்கள். அவர்களுடன் சுல்கிப்ளி புதிதாக இணைந்துள்ளார்.

அமானா தலைவர் 3 தவணைகளுக்கு மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதால் இதுவே முகமட் சாபுவுக்கான இறுதித் தவணையாகும்.

2015-இல் பக்காத்தான் ராயாட் கூட்டணி கலைக்கப்பட்டபோது பாஸ் கட்சி அதிலிருந்து பிரிந்து அம்னோவுடனும் நஜிப்புடனும் நெருக்கம் பாராட்டியது. இதனால் பாஸ் பிளவு கண்டது. முகமது சாபு தலைமையில் ஒரு பிரிவினர் அமானா கட்சியைத் தோற்றுவித்தனர். புதிதாக அமைக்கப்பட்ட பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் அமானா இணைந்தது.

மற்ற கட்சிகளை விட சற்று வித்தியாசமான அமைப்பு விதிகளை கொண்டது அமானா. கட்சித் தேர்தலில் தலைமை பொறுப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடைபெறாது. மாறாக 27 மத்திய செயலவை அல்லது உச்ச மன்ற உறுப்பினர்களைக் கொண்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த 27 உறுப்பினர்களின் தேர்தல் முடிவடைந்ததும் அந்த 27 உறுப்பினர்களும் ஒன்று கூடி தங்களுக்குள் தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை நியமிப்பார்கள்.

அமானா தலைவர் மூன்று தவணைகளுக்கு மட்டுமே தலைவராக பொறுப்பேற்க முடியும். முகமட் சாபு ஏற்கனவே இரண்டு தவணைகள் பதவி வகித்து விட்டார். அதனால் அவர் தலைவராக பதவி வகிப்பது இதுவே இறுதித் தவணையாகும்.

உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்  முகமட் சாபு பதவி வகிக்கிறார்.