Home நாடு அமானா கட்சித் தலைவராக முகமட் சாபு மாற்றப்படுவாரா?

அமானா கட்சித் தலைவராக முகமட் சாபு மாற்றப்படுவாரா?

185
0
SHARE
Ad
முகமட் சாபு – அமான கட்சியின் தேசியத் தலைவர்

கிள்ளான் : இன்றும் நாளையும் (டிசம்பர் 23 & 24)  நடைபெறும் அமானா கட்சியின் பொதுப் பேரவையில் அடுத்த மூன்று ஆண்டு தவணைக்கான பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமானா கட்சியின் தேர்தல் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. அமனா கட்சியின் நடப்பு தலைவராக இருக்கும் முகமட் சாபு மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருப்பதுதான் அமானா மீதான அரசியல் பார்வையாளர்களின் ஆர்வத்திற்கு காரணமாகும்.

மற்ற கட்சிகளை விட சற்று வித்தியாசமான அமைப்பு விதிகளை கொண்டது அமானா. நாளை நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைமை பொறுப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடைபெறாது. மாறாக 27 மத்திய செயலவை அல்லது உச்ச மன்ற உறுப்பினர்களைக் கொண்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறும். இந்த 27 உறுப்பினர்களின் தேர்தல் முடிவடைந்ததும் அந்த 27 உறுப்பினர்களும் ஒன்று கூடி தங்களுக்குள் தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை நியமிப்பார்கள்.

அமானா தலைவர் மூன்று தவணைகளுக்கு மட்டுமே தலைவராக பொறுப்பேற்க முடியும். முகமட் சாபு ஏற்கனவே இரண்டு தவணைகள் பதவி வகித்து விட்டார். அதனால் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் தலைவராக இன்னொரு தவணைக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்.

#TamilSchoolmychoice

கட்சியின் மற்றொரு முக்கியப் பொறுப்புக்கான தேர்தலும் நாளை நடைபெறும். யார் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட போகிறார் என்பதுதான் கட்சி உறுப்பினர்களிடையே இப்போது அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி.

கட்சியின் துணைத் தலைவராக இருந்த உள்நாட்டு வாணிப அமைச்சர் சாலாஹூடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருக்கிறது. நாளை நடைபெறும் தேர்தலில் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் முகமட் சாபு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் புதிய துணைத் தலைவர் யார் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

அவ்வாறு கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறவர் அடுத்த தலைவராகவும் வரக்கூடியவராக இருப்பார் என்பதால் அமானா மாநாடு இந்த முறை மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெறுகிறது.