கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் ஆய்வு அதிகாரி யூசுப் ராவுத்தர் செய்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவ அன்வார் இப்ராகிம் மற்றும் பிற சாட்சிகளை காவல் துறையினர் அழைப்பார்கள் என்று புக்கிட் அமான் தெரிவித்தது.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் இதனை உறுதிப்படுத்தினார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354-இன் கீழ் ஒரு விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஒருவருக்கு எதிராக தாக்குதல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
“முகமட் யூசுப் ராவுத்தரின் (புகார்) உரையாடலின் பதிவு டிசம்பர் 9-ஆம் தேதி புக்கிட் அமானில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்தில் பதிவுச் செய்யப்பட்டது. அன்வார் இப்ராகிம் மற்றும் பல தொடர்புடைய சாட்சிகளின் உரையாடல் பொருத்தமான தேதிக்கு பின்னர் எடுக்கப்படும்” என்று அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பிகேஆர் தேசிய காங்கிரஸுக்கு ஒரு நாள் முன்பு, யூசுப் ராவுத்தர், அன்வார் பாலியல் தொந்தரவுகள் செய்ததாக குற்றம் சாட்டினார்.
ஆயினும், இது குறித்து மறுத்து, தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் பெறுமாறு யூசுபுக்கு உரிமை கோரல் கடிதத்தை அனுப்புமாறு தனது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு செய்யத் தவறினால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று, யூசுப் செந்துல் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
கடந்த திங்களன்று, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமானில் யூசுப்பை காவல் துறையினர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் விசாரித்தனர். இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அவரை திரும்ப அழைத்தது குறிப்பிடத்தக்கது.