கோலா தெர்லா: கேமரன் மலை, கோலா தெர்லாவில் 60 விவசாயிகளை வெளியேற்றுவது தொடர்பாக பகாங் மாநில அரசின் முடிவால் ஏமாற்றமடைந்த பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலின் சிறப்பு அதிகாரி (இந்திய பிரதிநிதி) அப்பதவியிலிருந்து விலகினார்.
கூடுதலாக, கோலா தெர்லாவில் தற்காலிக ஆக்கிரமிப்பு (டிஒஎல்) பிரச்சனையில் அதிருப்தியின் அடையாளமாக மஇகாவின் 11 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர்.
கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் நிலங்களை பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு மாற்று நிலங்களை மாநில அரசு வழங்கத் தவறியதையும் அவர்கள் ஆட்சேபித்தனர்.
“நாங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான மஇகா அவசரக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் விளைவாக, 60 விவசாயிகளுக்கு மந்திரி பெசார் ஒரு தீர்வை வழங்கும் வரை மாநில அரசின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்” என்று வான் ரோஸ்டியின் சிறப்பு அதிகாரி வி.ஆறுமுகம் தெரிவித்தார்.
மாநில அரசின் நடவடிக்கைகளால் கட்சி மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக பகாங் மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் ஆறுமுகம் மலேசியாகினியிடம் கூறினார்.
“அங்குள்ள தோட்டக்காரர்கள் அங்கு வசிக்க வற்புறுத்துவதில்லை. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லத் தயாராக உள்ளனர். ஆகவே, 60 அல்லது அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு மாற்று நிலம் கொடுப்பதில் என்ன பிரச்சனை?”
“பகாங் மந்திரி பெசார் இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்துவார் என்று நம்பிகிறோம். இந்த 60 குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.
கேமரன் மலை சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டதில், அதில் துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில், உட்பட மாநில மந்திரி பெசாரும் இடம்பெற்றுள்ளார்.
உள்ளூர்வாசிகளுக்கு நீர் ஆதாரத்தில் இரசாயன மாசு ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நிலங்களை காலி செய்யுமாறு அங்குள்ள விவசாயிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாற்று நிலங்களை வழங்குமாறு வான் ரோஸ்டி மற்றும் ராம்லி முகமட் நோர் கேட்டுக் கொண்ட முடிவில் மஇகா அதிருப்தி அடைந்துள்ளது.