ஜெருசலம் – புதன்கிழமையன்று (25 டிசம்பர்) காசா பகுதியிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதி நகரை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றினால், பரபரப்பு ஏற்பட்டதோடு, பரப்புரையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாயாஹூ சிறிது நேரத்திற்கு பாதுகாப்பு தேடி ஒளிய வேண்டியதிருந்தது என இஸ்ரேலியத் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.
இருப்பினும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நெத்தன்யாயாஹூ தனது நிகழ்ச்சியை சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்தார்.
பாலஸ்தீனிய பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அஷ்கெலோன் நகரை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணையைத் தடுத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியது.
இன்று வியாழக்கிழமை நடைபெறும் உள்ளூர் தேர்தல் ஒன்றுக்காக பரப்புரை மேற்கொண்டிருந்தபோது அபாய ஒலி ஏற்படுத்தப்பட்டதால், நெத்தன்யாயாஹூவை அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாகக் கொண்டு சென்ற காட்சிகளை இஸ்ரேலியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
கடந்த செப்டம்பரிலும் நெத்தன்யாஹூ கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அபாய ஒலி ஏற்படுத்தப்பட்டு அவரது நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டது.