டெல் அவில்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் போரை நிறுத்த மறுத்துள்ளது. எனினும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கு அனுமதித்துள்ளது. எனினும் இந்த உதவிகள் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படுவதால், 2 மில்லியன் மக்களில் பெரும்பாலோன் பட்டினி, பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கணிக்கப்படுகிறது.
மனதை நோகடிக்கும் இன்னொரு புள்ளி விவரம் என்னவென்றால், இந்த நிலைமையால் அடுத்த 48 மணி நேரத்தில் சுமார் 14,000 குழந்தைகள் மடியக் கூடும் என ஐக்கிய நாடுகள் மன்றம் விடுத்திருக்கும் எச்சரிக்கைதான்!
ஹாமாஸ் மீதான போரை நிறுத்த வேண்டுமென்றால், அவர்கள் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், காசா பகுதி ஆயுதங்களற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் ஹாமாஸ் தலைவர் முகமட் சின்வார் கொல்லப்பட்டதாகத் தாங்கள் கருதுவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
தங்களின் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பாண்டவர் லியோ மனிதாபிமான உதவிகளை பாலஸ்தீனப் பகுதிக்குள் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.