Home One Line P2 பாஜக தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது

பாஜக தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது

1028
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் பிரபல இலக்கிய உரையாளர் நெல்லை கண்ணன் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி திருநெல்வேலி வட்டாரத்தில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் நடந்த இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், அதிமுக தலைவர்கள் குறித்தும் தரக் குறைவாகப் பேசினார்.

ஒரு கட்டத்தில் அமித் ஷா தான் மூளை என்றும் மோடி முட்டாள் என்றும் கூறிய நெல்லை கண்ணன், தொடர்ந்து அமித் ஷா ‘ஜோலியை’ முடித்து விட்டால், மோடியின் ‘ஜோலியும்’ முடிந்து விடும் என்று கூறினார். இவர்களின் ஜோலியை முடிக்க சாய்பு யாராவது வருவார்களா என்று பார்த்தால் இதுவரை யாரும் வரவில்லை என்றும் அந்தக் காணொளியில் நெல்லை கண்ணன் கூறியிருந்தார்.

அவரது உரைகள் காணொளி வடிவில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

நெல்லை கண்ணன் அதைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மருத்துவமனைகளின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.

பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா மெரினா கடற்கரைப் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையில் நெல்லை கண்ணன் பெரம்பலூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் தலைவர் சீமான் குரல் கொடுத்துள்ள வேளையில் கண்ணன் அவ்வாறு பேசியது தவறு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.