கோலாலம்பூர்: சீனா வுஹானில் இருந்து மலேசியர்களை ஏற்றி வந்த ஏகே8264 ஏர் ஆசியா விமானம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.57 மணிக்கு பாதுகாப்பாக கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மொத்தமாக 107 மலேசியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவ்விமானத்தில் பயணம் செய்தனர்.
வுஹானில் கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மொத்தம் 12 ஏர் ஆசியா பணியாளர்கள், எட்டு மீட்பு பணியாளர்கள் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஆறு மலேசிய தூதரக பணியாளர்கள் இந்த மனிதாபிமான உதவி மற்றும் அவசர நிவாரண திட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்து 141 பயணிகளும் விமான அவசரப் பிரிவில் (ஏடியூ), சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிந்தவர்கள் நேராக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
சோதனைகளைத் கடந்து செல்வோர் பேருந்து மூலம் கண்காணிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு அவர்கள் 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள்.