சென்னை – கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் இரசிகர்களை உலுக்கி வந்த கேள்விகள்,
அவர் அரசியலுக்கு வருவாரா?
கட்சியை எப்போது தொடங்குவார்?
முதலமைச்சர் பதவியை முன்வந்து ஏற்றுக் கொள்வாரா?
என்பவை மட்டுமல்ல!
டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசையில் பெர் கிரில்ஸ் (Bear Grylls) என்பவருடன் நடுக்காட்டுக்குச் சென்ற ரஜினிகாந்தின் சாகசங்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்பதும்தான்!
இறுதியாக நேற்று திங்கட்கிழமை இரவு (மார்ச் 23) டிஸ்கவரி அலைவரிசையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது அந்த நிகழ்ச்சி.
அஸ்ட்ரோவிலும் நேற்றிரவு 11.00 மணியளவில் ஒளிபரப்பானது, அந்த நிகழ்ச்சி! (Into The Wild With Bear Grylls and Rajinikanth)
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்ச்சி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துக் கொண்டு அசாம் மாநிலக் காடுகளுக்குள் பயணம் சென்ற பெர் கிரில்ஸ் இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினியை அழைத்துக் கொண்டு அத்தகைய ஒரு பயணத்தை மேற்கொண்டார்.
பிரபல நட்சத்திரங்களின் வாழ்த்துகள்
நிகழ்ச்சியின் இடையே பிரபல நட்சத்திரங்கள் காணொளி வழி வழங்கிய செய்திகளையும் பெர் கிரில்ஸ் தனது ஐபேட் சாதனத்தின் வழி காட்டினார்.
முதலில் வாழ்த்து சொன்னது கமல்ஹாசன். “நாம் இருவரும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்தும் தண்ணீர் சேமிப்பு குறித்தும் நிறைய பேசியிருக்கிறோம். இப்போது நீங்கள் இந்தக் காட்டுப் பயணம் மேற்கொள்வது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகிறேன்” என கமல்ஹாசன் தனது காணொளி வழி செய்தியில் தெரிவித்தார்.
அடுத்து கொஞ்ச நேரம் கழித்து நடிகர் மாதவனின் வாழ்த்துச் செய்தியையும், இறுதியாக இந்தி நடிகரும், எந்திரன் 2.0 படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்தவருமான அக்ஷய்குமார் காணொளி வழி பதிவு செய்திருந்த செய்தியையும் கிரில்ஸ் ரஜினிக்குக் காட்டினார்.
“என் வழி தனிவழி” என்ற ரஜினியின் வாசகத்தை தமிழிலேயே கூறிய அக்ஷய் குமார் ரஜினியின் துணிச்சலுக்கும், காட்டுப் பயணத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வாகனங்களில் ரஜினி பயணம்
முதலில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தில் காட்டுக்குள் வந்த ரஜினியின் அறிமுகக் காட்சியே அட்டகாசமாக, அவரது திரைப்படத்தின் முதல் காட்சிபோல் அசத்தலாக இருந்தது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த கிரில்சுடன் ஜீப் வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொண்டார் ரஜினி. வழியில் ஜீப்பின் சக்கரம் ஒன்று காற்றிழந்த காரணத்தால், கிரில்ஸ் அந்த வாகனத்தின் மாற்று சக்கரத்தைப் பொருத்துவதற்கு ரஜினி உதவி செய்தார்.
“ரஜினி, அதை எடுங்கள், இதை எடுங்கள்” ஒவ்வொரு சாமானையும் எடுத்துக் கொடுக்கச் சொல்லி, சக்கரத்தை மாற்றுவதற்கு ரஜினியை உதவி செய்யச் சொல்லி கிரில்ஸ் அவரிடம் வேலை வாங்கியதும், அதை ரஜினி பவ்யமாக எடுத்துக் கொடுத்ததும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது.
ஒரு பழைய இரும்புப் பாலத்தை, இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு கிரில்சுடன் பத்திரமாகக் கடந்த ரஜினி, பின்னர் சிறு குன்று போன்ற மலைப் பகுதியிலும் ஏறி இறங்கினார். அப்போது ரஜினிக்கு கைகளில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
ஓரிடத்தில் இறங்கி அங்கு தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்த சிறிய நதியின் நீரை கிரில்ஸ் எடுத்துக் கொண்டார். அப்போது காட்டில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் நீரின் தூய்மை குறித்தும் கிரில்ஸ், ரஜினிக்கு விளக்கமளித்தார்.
நீர் பார்ப்பதற்கு தூய்மையாக இருந்தாலும், சோதித்துப் பார்த்தால் அதில் பல தூய்மைக் கேடுகள் இருக்கும் என கிரில்ஸ் எச்சரித்தார். இந்தியாவில் சுமார் 21 நோய்கள் நீர் தூய்மைக் கேடு காரணமாக மக்களைப் பாதிப்பதாகவும் ரஜினி கிரில்சிடம் தெரிவித்தார்.
புலிகள் நீர் அருந்தும் ஏரியைக் கடந்த ரஜினி
ஓரிடத்தில் ஒரு சிறிய ஏரியை வந்தடைந்த அவர்கள், இடுப்பளவு நீரில் இறங்கி மெதுவாக நடந்து அந்த ஏரியைக் கடந்தனர். அந்த ஏரியில் முதலைகள் இருக்கக் கூடும் என ஏரியில் இறங்குவதற்கு முன்பாக கிரில்ஸ் ரஜினியிடம் கூற, ரஜினியின் முகமும் மாறியது.
“இப்படியே திரும்பிப் போய்விடலாமா?” என ரஜினி கிரில்சைக் கேட்டார். இருந்தாலும் ரஜினிக்குத் தைரியமூட்டிய கிரில்ஸ், ஆறு, ஏரிகளில் இருக்கும் சதுப்புநில முதலைகள் மிகவும் ஆபத்தானவை என்றும் புத்திசாலித்தனம் கொண்டவை என்றும் விளக்கம் கொடுத்தார்.
இந்த ஏரிப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த 3 நாட்களில் இந்தப் பகுதிகளில் முதலைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் ரஜினிக்கு தைரியம் கொடுத்த கிரில்ஸ், நாம் ஏரியைத் தாண்டி கடந்து சென்றால் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கேமராவைப் பார்த்து கடந்த சில நாட்களில் அந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
அதைத் தொடர்ந்து இருவரும் இடுப்பளவு நீரில் நடந்து சென்று ஏரியைக் கடந்தனர்.
ஏரியைக் கடந்த பின்னர் அங்கிருந்த கேமராவை எடுத்து அதில் உள்ள காட்சிகளை ரஜினிக்குப் போட்டுக் காட்டிய கிரில்ஸ் அதில் கடந்த ஓரிரு நாட்களில் பெரிய புலி ஒன்று அந்த ஏரிக்கரை வந்து தண்ணீர் குடித்துச் சென்ற காட்சியைக் காட்டியபோது ரஜினியும் அதிர்ந்து போனார்.
“அதோ அந்த இடத்தில் புலி வந்து தண்ணீர் குடித்தது” என கிரில்ஸ் கூறியதை ஆச்சரியத்தோடும், சற்றே பயத்தோடும் பார்த்தார் ரஜினி.
ஆக, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்ந்து சென்ற ரஜினியின் காட்டுப் பயண நிகழ்ச்சியை நேற்று மட்டும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பர் என மதிப்பிடப்படுகிறது.
70 வயதான ரஜினி மேற்கொண்டது ஓரளவுக்குப் பாதுகாப்பான பயணம்தான் என்றாலும், இந்த வயதிலும் அதைத் துணிச்சலோடும், ஒரு சவாலாகவும் அவர் மேற்கொண்டதைக் கண்டு நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த அனைவருக்கும் அவர் மீதான மதிப்பும், மரியாதையும் சில மடங்காவது கூடியிருக்கும்!