புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நண்பகல் வரை மலேசியாவில் 57 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,002-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,171-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று பதிவு செய்யப்பட்ட 57 சம்பவங்களில் 25 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்கள என்றும், 32 சம்பவங்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்பட்ட தொற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,729 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 14 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று இருவர் மரணமைந்துள்ள நிலையில், நாட்டில் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது.