புத்ராஜெயா: பள்ளி நேரத்தில் முகக்கவசங்கள் பயன்படுத்துவது கட்டாயமில்லை.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இதனைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகள் சோப்பு, கிருமித்தூய்மி மற்றும் உடல் வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
“முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை. பள்ளி அமர்வின் போது அறிகுறிகளைக் காட்டினால் மட்டுமே மாணவர்கள், ஊழியர்களுக்கு முகக்கவசங்களை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர்.
கொவிட்19 தொற்றுநோயால் நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி நான்கு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
பல மாத விடுமுறைக்கு பிறகு, புதிய இயல்பு நிலையின் கீழ், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
படிவம் ஒன்று முதல் படிவம் நான்கு மாணவர்கள், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்குத் திரும்பினர்.
இதற்கிடையில், ஒன்றாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஜூலை 22- ஆம் தேதி பள்ளிக்குச் செல்லத் தொடங்குவர்.
மலேசிய கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஜூலை 15 முதல் திறக்கப்படும் என்று அண்மையில் கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் கூறியிருந்தார்.
கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களை https://www.moe.gov.my/en/pemberitahuan/announcement/gp-buka-sekolah இல் பதிவிறக்கம் செய்யலாம்.