Home நாடு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்தது ஏன்? – கல்வி அமைச்சருக்கு லிம் குவான் எங் கேள்வி

ஆப்கானிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்தது ஏன்? – கல்வி அமைச்சருக்கு லிம் குவான் எங் கேள்வி

206
0
SHARE
Ad
லிம் குவான் எங்

கோலாலம்பூர்: கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதை உறுதிப்படுத்துமாறு ஜசெகவின் தேசிய தலைவர் லிம் குவான் எங் நேற்று புதன்கிழமை (நவம்பர் 20) கேட்டுக் கொண்டார்.

மக்கள் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், பெண்கள் கல்வி பற்றிய மனித உரிமைகளை கடுமையாகக் கருதுபவன் என்ற முறையிலும் இந்த விவகாரத்தைத் தான் முன்னெடுப்பதாக லிம் கூறியுள்ளார்.

“மலேசியாவுடன் தூதரக உறவு இல்லாத நாடு ஆப்கானிஸ்தான். பெண்கள் இடைநிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்க தடை விதித்துள்ள அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சகம் ஏன் அனுமதி வழங்கியது?” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பாட்லீனா சிடேக்
#TamilSchoolmychoice

ஜசெக சார்பில் துணைக் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் வோங் கா வோ-வுக்கும்கூட இந்த வருகையின் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் பாகான் டாலாம் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (நவம்பர் 16), பாட்லினா இந்த வருகை இம்மாதம் நடைபெற்று முடிந்ததை உறுதிப்படுத்தினார்.

பிரீ மலேசியா டுடேவின் அறிக்கைப்படி, அமைச்சர் கல்வி பற்றிய சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அரசு குழுவினருடன் பகிர்ந்துக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் வானொலி தொலைக்காட்சி அறிக்கைப்படி, நாட்டின் கல்வி இயக்குநர் தலைமையில் பிரதிநிதிகள் குழு ஒன்று மலேசியாவுக்கு வருகை தந்தது.

“பாட்லினா ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்வி தடையை பற்றி பேசினாரா?” என்றும் கூறிய லிம், மலேசியாவில் இதுபோன்ற பிரதிநிதிகளை வரவேற்பதில் என்ன பலன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மலேசிய கல்வி அமைச்சகம் ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு கல்வி மறுப்பது குறித்து பேசினார்களா என விளக்குமாறும் லிம் கேட்டுக் கொண்டார்.

“மேலும் ஒரு பெண்ணாக, பெண் அமைச்சராக, இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு கவலை இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஆகஸ்ட் மாதம் ஐ.நா அமைப்பான யுனெஸ்கோவின் இயக்குநர் ஆடிரி அசௌலாய் வெளியிட்ட அறிக்கையில் 2021-ல் தாலிபன் மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து குறைந்தது 1.4 மில்லியன் பெண் மாணவிகளுக்கு இடைநிலைக் கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டார்.

“ஏற்கனவே பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் மாணவிகளை சேர்த்தால், தற்பொழுது நாட்டில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பெண் மாணவிகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். அதாவது ஆப்கான் பள்ளிப்படிப்பு வயதுக்கு உட்பட்ட பெண்கள் 80 சதவிகிதம்,” என்றும் யுனெஸ்கோ இயக்குநர் கூறினார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் பிரதமர் அன்வர் இப்ராகிம் மலேசியா ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைப்பையும் தூதரக உறவுகளையும் மேம்படுத்தவும் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் மலேசியா, பெண்கள் கல்வி பற்றிய தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் உறுதிபடக் கூறினார்.