கோலாலம்பூர் : ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி இந்த 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசிய மக்களுக்கும் தனது இனிய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஊடகங்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“நமது நாடு பல இனங்களின் சார்புகளைக் கொண்டவையாகும். அரசியல் நீரோட்டம், பொருளாதார வளர்ச்சி ஆழ்ந்த கலாச்சாரங்களை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளாலும் நமது நாடு மதிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் நமது எண்ணங்கள் யாவும் தேசப்பற்றோடும், நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையோடும் நாம் வாழ்வதும் ஆகும். நாடு கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் நமது தனிப்பட்ட சுதந்திரப் போக்கினை அன்றாட வாழ்க்கையில் முற்றாகக் களைந்து மீட்சிக்கான பொது நடமாட்ட ஆணையைப் பின்பற்றி நாட்டையும் நம்மையும் தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்றும் சரவணன் தனது செய்தியில் தெரிவித்தார்.
“சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல! இந்த சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்பதனை எதிர்காலத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். மிகவும் சவாலான இந்த காலகட்டத்தில் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் மிகவும் விவேகமுடன் செயல்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அதிகமானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் மலேசிய நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது பத்திரிகை செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.