Home One Line P2 “மூலான்” – டிஸ்னியின் படம் வலைத்திரையில் பார்க்க 30 டாலர்!

“மூலான்” – டிஸ்னியின் படம் வலைத்திரையில் பார்க்க 30 டாலர்!

824
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் : எதிர்வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் உலக அளவில் திரையரங்குகளிலும், ஓடிடி எனப்படும் கட்டண வலைத்திரைகளிலும் வெளியீடு காண்கிறது டிஸ்னி நிறுவனத்தின் “மூலான்” (Mulan) திரைப்படம்.

பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், தனது டிஸ்னி பிளஸ் கட்டண வலைத்திரையிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை டிஸ்னி திரையிடுகிறது. டிஸ்னி பிளஸ் வாடிக்கையாளர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமானால் கூடுதலாக இதற்கென 30 டாலர் செலுத்த வேண்டும் எனவும் டிஸ்னி அறிவித்துள்ளது.

ஏற்கனவே, டிஸ்னி பிளஸ் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு தலா 7 அமெரிக்க டாலர் கட்டணத்தை டிஸ்னி பிளஸ் கட்டண வலைத் திரைக்காக செலுத்தி வருகின்றனர். இவர்கள் “மூலான்” திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் கூடுதலாக 30 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.

#TamilSchoolmychoice

திரையரங்குகள் பல நாடுகளில் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டு வருகின்றன. மலேசியாவில் கட்டுப்பாடுகளுடனும், விதிமுறைகளுடனும் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மூலான் திரைப்படம் மலேசியாவிலும் திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கிறது.

“டெனட்” முதல் சோதனை முயற்சி

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக அனைத்துலக அளவில் வெளியானது “டெனட்” (Tenet) என்ற ஹாலிவுட் ஆங்கிலப்படம். பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்தோபர் நோலான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இது.

பல முறை இதன் திரையீடு ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் இடையிலான கூட்டுத் தயாரிப்பான இந்தப் படம் சுமார் 225 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படமாகும்.

இயக்குநர் கிறிஸ்தோபர் நோலானின் படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகியிருக்கும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அனைத்துலக அளவில் திரையரங்குகளில் திரையிட்டதன் மூலம் ஹாலிவுட் தனது பரிசோதனையை நடத்திக் காட்ட முனைந்துள்ளது. எந்த அளவுக்கு இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் மக்கள் திரளப் போகிறார்கள், எத்தகைய பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் அடுத்தடுத்த பிரம்மாண்ட ஆங்கிலப் படங்களின் திரையீட்டுத் தேதிகளும் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

மலேசியாவிலும் இதே ஆகஸ்ட் 26-ஆம் தேதி “டெனட்” திரையிடப்பட்டது. எனினும் இந்தியாவில் இந்தப்படம் திரையிடப்படாது.

டெனட் படத்தைத் தொடர்ந்து அடுத்த வாரம் வெளியாகும் பிரம்மாண்டமான தயாரிப்புதான் மூலான். சீன இதிகாசத்தின் பெண் கதாபாத்திரத்தைக் கொண்ட இந்தப் படம் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் கார்ட்டூன் வடிவில் டிஸ்னி தயாரித்து வெளியிட்டது. வசூலிலும் வெற்றி பெற்றது மூலான்.

டிஸ்னியின் இந்த வித்தியாச வணிக முயற்சியால் இலாபமோ நட்டமோ என்பது குறித்து அந்நிறுவனம் கவலைப்படவில்லை. கொவிட்-19 பிரச்சனைகளால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கட்டண வலைத் திரைகள் (ஓடிடி) இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் மக்களிடையே பிரபலமாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்த இரண்டு வணிக அம்சங்களையும் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியைத்தான் டிஸ்னி மேற்கொண்டிருக்கிறது.

200 மில்லியன் டாலர் செலவில் தயாரான படம் மூலான். கட்டண வலைத் திரைகளில் திரையிடுவதால் மட்டும் இந்த முதலீட்டை டிஸ்னி திரும்பப் பெற முடியாது.

திரையரங்குகளிலும் சினிமா இரசிகர்களின் ஆர்வம் இந்த கொவிட்-19 காலகட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. பல நாடுகளில் குறிப்பாக மிகப் பெரிய சந்தையைக் கொண்ட இந்தியாவில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.

எனவேதான், தனது கட்டண வலைத் திரை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 30 டாலர் விலையில் மூலான் திரைப்படத்தை வழங்குகிறது டிஸ்னி.

இந்தப் புதிய, நவீனத்துவமான தொழில்நுட்ப, வணிக முயற்சியினால் கிடைக்கக் கூடிய அனுபவங்களைக் கொண்டு அடுத்த கட்ட வியூகங்களை டிஸ்னி மட்டுமின்றி மற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் திட்டமிடுவார்கள்.

மூலான் திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: