Home One Line P2 டிஸ்னி பிளஸ் – பொருத்தமான நேரத்தில் டிஸ்னியைத் தூக்கி நிறுத்திய மாற்றம்

டிஸ்னி பிளஸ் – பொருத்தமான நேரத்தில் டிஸ்னியைத் தூக்கி நிறுத்திய மாற்றம்

603
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்க திரைப்பட நிறுவனம் டிஸ்னி. உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன்களை உருவாக்கி உலவ விட்ட நிறுவனம். உலகம் முழுவதும் உல்லாசப் பூங்காக்களையும் கொண்டிருக்கிறது டிஸ்னி.

கடந்த நவம்பர் 2019-இல் தனது திரைப்படங்களை பொதுமக்கள் கட்டணம் செலுத்தி இணையம் வழி பார்க்கும் தளமாக டிஸ்னி பிளஸ் (+) நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது டிஸ்னி.

ஒரு சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது டிஸ்னியின் வணிக அமைப்பையே உருமாற்றியிருக்கிறது. பொருத்தமான நேரத்தில் செய்யப்பட்ட பொருத்தமான முடிவாக இது பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

டிஸ்னி பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே கொவிட்-19 பாதிப்பால் உலகம் முழுவதும் டிஸ்னி உல்லாசப் பூங்காக்கள் மூடப்பட்டன. வருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

டிஸ்னி பிளஸ் தொடங்கப்படும்போது கொவிட்-19 பாதிப்புகள் எதுவும் இல்லை. நடமாட்டக் கட்டுப்பாடுகளும் இல்லை.

எனவே, டிஸ்னி பிளஸ் கிடைக்கக் கூடிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக இல்லங்களில் முடங்கிக் கிடந்த மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் இன்னொரு உபரி வருமானமாக டிஸ்னி பிளஸ் கட்டணங்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாதம் ஒன்றுக்கு 6.99 அமெரிக்க டாலர்கள் கட்டணத்தை டிஸ்னி பிளஸ் விதிக்கிறது.

அதே சமயத்தில் இந்தக் கட்டணத்தின் மூலம் இதுவரையில் நஷ்டத்தையே டிஸ்னி எதிர்நோக்கி வருகிறது என்றும் வணிக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காரணம் டிஸ்னி பிளஸ் செயல்பாடுகளை தொடங்குவதற்கும் முடுக்கி விடுவதற்கும் டிஸ்னி கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்தது. இந்தத் தொகை டிஸ்னியின் உல்லாசப் பூங்காக்கள் போன்றவற்றின் மூலம் கிடைத்த வருமானங்களாகும். இந்தத் தொகையை எடுத்துத்தான் டிஸ்னி பிளஸ் வணிகத்தில் முதலீடு செய்தனர்.

இப்போதோ, டிஸ்னி பூங்காக்களில் இருந்து வருமானம் இல்லை. டிஸ்னி பிளஸ் சொற்ப கட்டணம் மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளைத் திரும்பப் பெறவும் நீண்ட காலம் பிடிக்கும்.

கடந்த காலாண்டில் தனது இலாபத்தில் 91 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டது என டிஸ்னி அறிவித்திருக்கிறது.

இரண்டாவது காலாண்டில் தனது ஸ்ட்ரீமிங் எனப்படும் இணையம் வழி பொழுதுபோக்கு தளத்தை இயக்குவதற்கு டிஸ்னி 812 மில்லியன் டாலர்கள் இழப்பை எதிர்நோக்கியது.

ஹூலு மற்றும் ஈஎஸ்பிஎன்+ என்ற (Hulu and ESPN+) என்ற இரு தளங்களையும் டிஸ்னி நடத்தி வருகிறது.

கட்டணம் விதிக்கும் பொழுதுபோக்கு சாதனங்களை நடத்துவது ஒரு வகை செலவினம் என்றால், அதற்கான ஆரம்ப கட்ட தொழில்நுட்ப உருவாக்கங்கள், உள்ளடக்கங்களை உருவாக்குவது என ஏகப்பட்ட செலவினங்கள் ஏற்படுகின்றன,

2024 ஆண்டு வரை டிஸ்னி பிளஸ் இலாபத்தை அடைய முடியாது எனவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

தற்போது சுமார் 54 மில்லியன் வாடிக்கையாளர்களை டிஸ்னி பிளஸ் கொண்டிருக்கிறது.

டிஸ்னியின் திரைப்படப் பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. பாதியில் நிற்கும் அந்தத் திரைப்படத் தயாரிப்புகள் முடங்கிக் கிடக்கின்றன. உல்லாசப் பூங்காக்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை.

சீனாவின் ஷங்காய் நகரின் டிஸ்னி பூங்கா கடந்த மே 11-இல் திறக்கப்பட்டது. முழுமையான வருகையாளர்கள் இன்னும் வரத் தொடங்கவில்லை.

டிஸ்னிக்கு வருமானம் ஈட்டித் தரும் இன்னொரு தொழில் அவர்களின் திரைப்படக் கதாபாத்திரங்கள் தொடர்பானது. அந்தக் கதாபாத்திரங்களின் உருவச் சிலைகள் பெருமளவில் விற்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இப்போது அதற்கும் போதுமான விற்பனை வாய்ப்பு இல்லை.

ஆக, டிஸ்னி பிளஸ் ஒருபுறத்தில் புதிய வருமானத்திற்கான வழியை டிஸ்னிக்கு தந்திருக்கிறது. இன்னொரு புறத்தில் அதன்மூலம் கோடிக்கணக்கான முதலீடுகளை விழுங்கச் செய்திருக்கிறது.

வழக்கமான வருமானங்களையும் இழந்து விழிபிதுங்கி நிற்கிறது டிஸ்னி பிளஸ்! இப்படியாக ஒருபுறத்தில் புதிய வருமானத்திற்கான மகிழ்ச்சியையும் இன்னொரு புறத்தில் சோதனையான காலகட்டத்தையும் டிஸ்னிக்கு ஏற்படுத்தியிருக்கிறது டிஸ்னி பிளஸ்!