நியூயார்க் : உலகம் எங்கிலும் பிரபலமாகிவரும் கட்டண வலைத்திரை (ஓடிடி) தளங்களில் ஒன்றாகக் கடந்த ஆண்டில் அறிமுகமானது டிஸ்னி பிளஸ். கொவிட்-19 பாதிப்புகளால் டிஸ்னியின் உல்லாசப் பூங்காக்கள் மூடப்பட்டு வருமான இழப்பு ஏற்பட்ட சூழலில் டிஸ்னி பிளஸ் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக அந்நிறுவனத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், இனிவரும் காலங்களில் எடுக்கப்படவிருக்கும் திரைப்படங்கள் என பல முக்கியத் திரைப்படங்களின் களஞ்சியமாக டிஸ்னி பிளஸ் திகழ்வதால் ஏராளமான சந்தாதாரர்கள் இந்தத் தளத்தில் இணைந்தனர்.
இதுவரையில் 86 மில்லியன் சந்தாதாரர்கள் டிஸ்னி பிளஸ் தொடங்கியதிலிருந்து அதில் இணைந்திருக்கின்றனர்.
கடந்த காலாண்டில் இந்த சந்தா எண்ணிக்கை 74 மில்லியனாக இருந்தது.
கடந்த மார்ச் மாதம் முதல் சந்தாத் தொகையை அமெரிக்காவில் 1 டாலருக்கு உயர்த்தி 7.99 டாலர்களாக நிர்ணயிப்பதாகவும் டிஸ்னி பிளஸ் அறிவித்தது.
எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் 230 மில்லியன் முதல் 260 மில்லியன் சந்தாதாரர்களைத் திரட்ட டிஸ்னி பிளஸ் திட்டமிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதற்கான இலக்கு 60 மில்லியன் முதல் 90 மில்லியன் என்று மட்டுமே டிஸ்னி பிளஸ் நிர்ணயித்திருந்தது.
உலக அளவில் 137 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் டிஸ்னி பிளஸ் டிஸ்னி திரைப்படங்களோடு, ஹூலு, ஈஎஸ்பிஎன் விளையாட்டுப்போட்டிகள், இந்தியாவின் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களையும் இணைத்து வழங்குகிறது.
அடுத்த ஆண்டில் தென் கொரியா, கிழக்கு ஐரோப்பா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் டிஸ்னி பிளஸ் அறிமுகம் காணவிருக்கிறது.
மற்றொரு ஓடிடி தளமான வார்னர் பிரதர்ஸ் இனி தங்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், வலைத்திரைகளிலும் வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர்.