Home One Line P2 டிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா?

டிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா?

884
0
SHARE
Ad

ஹாலிவுட் – அண்மைய ஆண்டுகளில் வணிக ரீதியாகவும், சினிமாத் துறையிலும் பல சாதனைகளைப் புரிந்து, கோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தையும், இலாபத்தையும் அள்ளிக் குவித்திருக்கும் டிஸ்னி நிறுவனம், தனது அடுத்த கட்ட முக்கிய நகர்வாக டிஸ்னி + என்ற கட்டணம் மூலம் சினிமாப் படங்களையும், பொழுது போக்கு  நிகழ்ச்சிகளையும் வழங்கும் திட்டத்தை இன்று நவம்பர் 12-ஆம் தேதி முதல் வழங்குகிறது.

ஏற்கனவே, நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசோன் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தத் துறையில், தனது சொந்தத் தயாரிப்புகளை முதல்கட்ட உள்ளடக்கமாகக் கொண்டு டிஸ்னி + சேவை தொடங்குகிறது.

மார்வல் ஸ்டூடியோவின் சூப்பர் ஹீரோ சினிமாக்கள், ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் எல்லாம் டிஸ்னி வசம்தான் உள்ளன. 1937-ஆம் ஆண்டு முதல் திரைப்படத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் டிஸ்னி அந்த காலகட்டத்தில் தயாரித்த “ஸ்னோ வைட் அண்ட் தி செவன் டுவார்வ்ஸ்” (Snow White and the Seven Dwarfs) என்ற திரைப்படம் தொடங்கி அனைத்து கார்ட்டூன் படங்களையும் இந்தக் கட்டண சேவையின்வழி வழங்கவிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் பிக்சார் நிறுவனத்தின் திரைப்படங்கள், ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசையிலான திரைப்படங்கள், நேஷனல் ஜியோகிராபிக் அலைவரிசையின் ஆவணப் படங்கள் ஆகியவை உள்ளிட்ட இன்னும் ஏராளமான பொழுதுபோக்குப் படங்களையும் டிஸ்னி + வழங்கும்.

இவையனைத்தும் மாதம் ஒன்றுக்கு 6.99 அமெரிக்க டாலர் கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

இன்னும் கூடுதலாக இஎஸ்பிஎன் விளையாட்டு அலைவரிசை, ஹூலு இணையத் தொடர்பு ஆகியவை உள்ளிட்ட கூடுதல் சேவைகளைப் பெறவிரும்புபவர்கள் மாதம் 12.99 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.

போப் இகர் – டிஸ்னி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி

தலைமைச் செயல் அதிகாரியாக டிஸ்னியை கடந்த 14 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் போப் இகர் (Bob Iger) தனது பதவிக் காலத்தில் பலவிதமான வணிக உடன்பாடுகளைத் துணிச்சலோடு எடுத்து டிஸ்னியை மிகப் பெரிய நிறுவனமான வளர்ச்சி காணச் செய்துள்ளார்.

2009-இல் 4 பில்லியன் டாலருக்கு மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை வாங்கிய போப் இகர் அதன் மூலம் அந்நிறுவனத்தின் எண்ணற்ற சிறந்த பொழுதுபோக்குப் படங்களையும் டிஸ்னி வசம் கொண்டு வந்தார்.

பின்னர் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களைக் கொண்டிருந்த லூகாஸ் பிலிம் நிறுவனத்தை 2012-இல் 4 பில்லியன் டாலருக்கு டிஸ்னி வாங்கியது.

இந்த புதிய இணைப்புகளின் மூலம் உலகின் மிகப் பிரம்மாண்டமான பொழுதுபோக்குப் படங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள டிஸ்னி, தனது புதிய கட்டண சேவையான டிஸ்னி + மூலம் நெட்பிலிக்ஸ், அமேசோன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் இந்த டிஸ்னி + சேவைகளின் தொடக்கத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.