சென்னை: முன்னாள் தமிழக முதல்வரும், நடிகையுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்’தலைவி’. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரனாவ் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘தலைவி’ திரைப்படம் ஜூன் 26 அன்று வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ‘தலைவி’ விரைவில் ஓடிடி (OTT) எனப்படும் கட்டணை இணையத் தளங்களில் (இணையம் வழி கட்டணம் செலுத்தி படம் பார்ப்பது) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில், ஒரு நேர்காணலில், பேசிய கங்கனா இந்த படம் இரண்டு பெரிய இணையத் தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அதே நேரத்தில் ‘தலைவி’ போன்ற ஒரு படம் இம்மாதிரியான தளங்களில் மட்டுமே நேரடியாக வெளியிட முடியாது என்று கூறினார்.
இணையம் வழியான வெளியீட்டை விட இந்த படம், மேலும் பெரிய அளவில் திரையரங்குகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் அரவிந்த் சுவாமி, எம்ஜிஆராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ள இப்படத்தை விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்காக கங்கனா தமிழ் மொழி மற்றும் பரதநாட்டியம் கற்றது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவாக நடிக்க 10 கிலோ உடல் எடையைக் கூட்டியுள்ளார்.