Home One Line P2 “டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது?

“டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது?

903
0
SHARE
Ad

ஹாலிவுட் : ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்தோபர் நோலான் எழுதி இயக்கியிருக்கும் “டெனட்” (Tenet) ஆங்கிலப் படத்தின் திரையீட்டை ஹாலிவுட்டே பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஏன் தெரியுமா?

கொவிட்-19 பிரச்சனைகளால் அனைத்துலக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஹாலிவுட் திரைப்பட உலகில் சோதனை முயற்சியாக முதன் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் பிரம்மாண்டமான தயாரிப்பு “டெனட்” ஆகும்.

#TamilSchoolmychoice

திரையரங்குகள் சில மாதங்களாக மூடப்பட்டு கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றன. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால், பெரிய அளவிலான படங்கள் எதுவும் திரையீடு காணவில்லை. பழைய படங்கள் பாதிக் கட்டண விலையில் திரையிடப்படுகின்றன.

மலேசியாவிலும் இதே நிலைமைதான்! இந்தியாவிலோ இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் அனைத்துலக அளவில் வெளியாகிறது “டெனட்”. பல முறை இதன் திரையீடு ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் இடையிலான கூட்டுத் தயாரிப்பான இந்தப் படம் சுமார் 225 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படமாகும்.

இயக்குநர் கிறிஸ்தோபர் நோலானின் படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகியிருக்கும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அனைத்துலக அளவில் திரையரங்குகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையிடுவதன் மூலம்தான் ஹாலிவுட் தனது பரிசோதனையை நடத்திக் காட்ட முனைந்துள்ளது. எந்த அளவுக்கு இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் மக்கள் திரளப் போகிறார்கள், எத்தகைய பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் அடுத்தடுத்த பிரம்மாண்ட ஆங்கிலப் படங்களின் திரையீட்டுத் தேதிகளும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவிலும் இதே ஆகஸ்ட் 26-ஆம் தேதி “டெனட்” திரையிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்தப்படம் திரையிடப்படாது.

பேட்மேன் கதாபாத்திரத்தைக் கொண்ட “டார்க் நைட்” வரிசைப் படங்களின் மூலமும், இன்செப்ஷன், டன்கிர்க், இண்டெர்செல்லார், பிரெஸ்டிஜ், மெமண்டோ போன்ற படங்களின் மூலமும் தனது தனித்துவ இயக்கத்திற்கு பாராட்டைப் பெற்றவர் கிறிஸ்தோபர் நோலான்.

இந்தப் படத்தில் பிரபல இந்திப்பட நடிகை டிம்பிள் கபாடியாவும் நடிக்கிறார்.

பிரபல நடிகர் டென்சல் வாஷிங்டனின் மகனான ஜோன் டேவிட் வாஷிங்டன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார். பிரபல நடிகர் மைக்கல் கேன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“டெனட்” ஆங்கிலப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம் :