Home One Line P2 திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்

315
0
SHARE

சென்னை : திமுகவின் நீண்ட கால உறுப்பினருமான சிறந்த மேடைப் பேச்சாளருமான ரகுமான்கான் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கலைஞர் கருணாநிதி- எம்ஜிஆர் அரசியல் போராட்டம் தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது திமுக மேடைகளில் தனது அழகுத்தமிழால் திமுகவுக்காக முழங்கியவர் ரகுமான் கான்.

சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த இவரது சட்டமன்ற உரைகளும் புகழ்பெற்றவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை. ஆவேசமும், போராட்ட கோணமும் அவரது உரைகளில் பொதிந்திருக்கும்.

இளம் வயதில் சுருள் சுருளான முடியுடன், அதில் ஒற்றைக் கற்றை தனியே நீண்டு நெற்றியில் புரள அவர் திமுக மேடைகளில் தனக்கே உரிய வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார்.

“திமுகவின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவர் மறைந்தார்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ரகுமான் கானுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று காலை அவரது படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை தெரிவித்தார்.

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் “இடி” “மின்னல்” “மழை”-யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த – கழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் திரு. ரகுமான்கான் அவர்கள் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன். ஆறுதல் கூறவோ – இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது; திறனிழந்து திண்டாடுகிறது; உள்ளம் பதறுகிறது” என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

இளம் வயது ரகுமான் கான் (இடதுபுறம்)

“அண்ணனின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் “முரசொலி” கட்டுரைகளும் – “முழங்கிய மேடைப் பேச்சுகளும்” என்றும் நம் கண்களிலே இருக்கும்; காதுகளிலே ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாசமிகு அண்ணன் ரகுமான்கான் அவர்களின் குடும்பத்திற்கும் – உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

“ஆற்றல் மிக்க – அன்பு மிக்க – இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரை இழந்து பரிதவிக்கிறேன்; இயக்கத் தோழர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் தத்தளித்து நிற்கிறேன்” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ரகுமான் கான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், வைகோ, துரைமுருகன், முரசொலி செல்வம் ஆகியோரோடு மாணவப் பருவத்திலேயே ஈடுபட்டவர்.

1977-ல் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்  ரகுமான் கான். சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக கருணாநிதியின் அமைச்சரவையில் பணியாற்றினார்.

“ரகுமான் கான் மறைவினையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளையும், மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments