புதுடில்லி : உலகமெங்கும் கொவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஒரே நாளில் 78,761 எண்ணிக்கையிலான கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதுவரையில் உலக அளவில் ஒரு நாட்டில் இத்தனை சம்பவங்கள் ஒரே நாளில் பதிவானது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 77,299 கொவிட்-19 சம்பவங்கள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி பதிவானது. தற்போது அந்த எண்ணிக்கையை இந்தியா முறியடித்திருக்கிறது.
இந்தியாவில் இதுவரையில் 35.4 மில்லியன் கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியா மிக மோசமாக கொவிட்-19 சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக திகழ்கிறது.
இதுவரையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும்.
இதற்கிடையில் இந்தியாவில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை ஒரே நாளில் 948 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்து இன்று வரையில் 63,498 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்றன.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நேற்று 331 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் 136 மரணங்கள் பதிவாயின.
இதற்கிடையில் அண்மைக் காலமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ இரயில் சேவைகள் இனி செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த இரயில் சேவைகள் அனைத்திந்திய அளவில் நிறுத்தப்பட்டிருந்தன.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மனமகிழ் மையங்கள், உல்லாச பூங்காக்கள் போன்றவை இன்னும் மூடப்பட்டு இருக்கின்றன.
கொவிட்-19 பிரச்சனைகளால் இதுவரை சந்தித்திராத அளவுக்கு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது.