Home One Line P1 கொவிட்19: மலேசியாவில் இன்னொரு மரணம் – 6 புதிய சம்பவங்கள்

கொவிட்19: மலேசியாவில் இன்னொரு மரணம் – 6 புதிய சம்பவங்கள்

1137
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அந்த அறிவிப்பை வெளியிட்டது.

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் இன்னொரு கொவிட்-19 தொடர்பான மரணமும் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஜூலை 29-ஆம் தேதிதான் கொவிட்-19 மரணம் மலேசியாவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி கடந்த ஒரு மாதத்தில் முதல் மரணம் பதிவானது.

நேற்றைய மரணத்துடன் சேர்த்து இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 127 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களில் 2 பேர் மட்டுமே உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். இவர்கள் கெடாவைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஒருவர் தாவார் தொற்றுத் திரள் குழுவைச் சேர்ந்தவர். இன்னொருவர் தெலாகா தொற்றுத் திரள் குழுவைச் சேர்ந்தவர்.

எஞ்சிய 4 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். இவர்களில் இருவர் மலேசியர்கள். இருவர் மலேசியர் அல்லாத வெளிநாட்டவர். இந்த நான்கு சம்பவங்களும் சிலாங்கூரில் பதிவானவை.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,340 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,054 ஆகும்.

மரணமடைந்தவர் 62 வயதுடைய மலேசியராவார். இவருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்கனவே இருந்தன. கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தாவார் தொற்றுத் திரள் மூலம் இவருக்கு கொவிட்-19 தொற்று பரவியது. ஆகஸ்ட் 30-ஆம் மேதி இரவு 10.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 159 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.