சென்னை: அண்மையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமென்ற கடிதத்தை தலைமை நீதிபதி அமர்வு நேற்று நிராகரித்தது.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லையென அந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது. சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கான காரணம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியிருந்தார்.
கொவிட்19 தொற்றுக்கு பயந்து நீதிமன்றம் காணொலி வாயிலாக விசாரணையை மேற்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாணவர்களை மட்டும் நேரில் சென்று தேர்வெழுத சொல்லுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் என்று சூர்யா நீட் தேர்வுக்கு எதிரான தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பலரது ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றது.
சூர்யாவின் இந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லையென சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆறு பேர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு வெளியிட்ட பதிவில் “இந்திய நீதித்துறையின் நிறுவன மகத்துவத்தால் நான் மகிழ்கிறேன். நான் எப்போதும் நம் நீதித்துறை மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இது நம் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கையாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.