அலோர் ஸ்டார்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 வட மலேசிய பல்கலைக்கழகம் மாணவர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து அப்பல்கலைக்கழகம் மூடப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கட்டாய பரிசோதனை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அக்டோபர் 20 அன்று சபாவிலிருந்து திரும்பிய மாணவர் ஒருவர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
அண்மையக் காலமாக சபாவிலிருந்து தீபகற்பத்தில் ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வகையில் உள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 200-க்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று, நாட்டில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 293- ஆக பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இவற்றில் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். மற்ற 292 தொற்றுகளும் உள்நாட்டிலேயே காணப்பட்டவையாகும்.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 12,381 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை 67 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,283 ஆக உயர்ந்தது.
இன்னும் 1,961 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.