Home One Line P1 செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)

செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)

690
0
SHARE
Ad

(கடந்த 02 அக்டோபர் 2020-இல் “செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் இடம் பெற்ற “மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)” என்ற தலைப்பிலான கீழ்க்காணும் காணொலியின் கட்டுரை வடிவம்)

செல்லியல் பார்வை | The Parliament seats MIC is eyeing (Part 1) | 02 October 2020 மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற  சிலாங்கூர் மாநில மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றிய மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 15-ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்படி மஇகாவினரைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

விரைவில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு, தேர்தல் பணிகளை முன்கூட்டியே முடுக்கி விட்டிருக்கும் மஇகா எந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடக் குறி வைத்திருக்கிறது?

சுருக்கமாக ஒரு கண்ணோட்டம் விடுவோம்!

தாப்பா நாடாளுமன்ற தொகுதி

தற்போது மஇகா வசம் இருக்கும் ஒரே தொகுதி. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எம்.சரவணன். பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்திருக்கும் தொகுதி என்பதால் மீண்டும் இந்த முறையும் மஇகாவுக்கு ஒதுக்கப்படும் என்பது உறுதி.

கடந்த பொதுத் தேர்தலில் 614 வாக்குகள் வித்தியாசத்திலேயே இங்கு சரவணன் வெற்றி பெற முடிந்தது.

எனினும் தொகுதியில் சரவணன் ஆற்றியிருக்கும் நிறைவான மக்கள் பணிகள்;

3 தவணைகளாக தொகுதியைத் தற்காத்து வந்திருக்கும் அவரது அனுபவம்;

அமைச்சர் பொறுப்பு; பிரச்சாரத் திறன்;

கடந்த முறை இங்கு போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற பாஸ் கட்சி இந்த முறை போட்டியிடாது என்ற சாதகம்;

அம்னோ-பாஸ் முவாபாக்காட் கூட்டணிக்கு சாதகமான மலாய் வாக்குகளின் பலம்:

இப்படி எல்லாம் சேர்ந்து தாப்பாவில் மீண்டும் மஇகா-தேசிய முன்னணி சுலபமாக இந்த முறையும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் குறி வைத்திருக்கும் தொகுதி சுங்கை சிப்புட். சில மாதங்களுக்கு முன்னரே களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து வருகிறார் விக்னேஸ்வரன்.

ஒவ்வொரு வாரமும் தொகுதிக்கு நேரடியாக சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மக்களைச் சந்திக்கிறார்.

மீண்டும் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுமா? அப்படியே போட்டியிட்டாலும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கேசவனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கு சுங்கை சிப்புட் ஒதுக்கப்படுமா?

மீண்டும் ஜசெக இங்கு போட்டியிடுமா?

டாக்டர் மைக்கல் ஜெயகுமார்

பிஎஸ்எம் கட்சியின் சார்பில் மீண்டும் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் போட்டியிடுவாரா? கடந்த பொதுத் தேர்தல் போன்று பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிடுவாரா? அல்லது அவருக்கு பிகேஆர் சின்னத்தை இந்த முறை ஒதுக்க அந்தக் கட்சி முன்வருமா?

இப்படியாகப் பல குழப்பங்களில் பக்காத்தான் கூட்டணி இந்தத் தொகுதியில் சிக்கியிருக்கிறது. எனவே, போட்டி வேட்பாளர் யார்? எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதனால், விக்னேஸ்வரனுக்கான ஆதரவு பெருகி வருகிறது.

மூன்று தவணைகளாக பக்காத்தான் கூட்டணி வசம் இருந்தாலும் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகள் அவ்வளவாக இல்லை. மக்கள் உதவித் திட்டங்களும்  இல்லை. அதை நிவர்த்தி செய்யும் நோக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், மஇகா இந்த முறை இங்கு முன்னணி வகிப்பதற்கு முக்கியக் காரணம்.

கடந்த முறை இங்கு போட்டியிட்டு 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற பாஸ் கட்சி இந்த முறை போட்டியிடாது; மாறாக, மஇகா-தேசிய முன்னணி வேட்பாளருக்கே ஆதரவு வழங்கும் என்பது உறுதி.

எனவே, மஇகா 3 தவணகளுக்குப் பிறகு சுங்கை சிப்புட்டை வெற்றி கொள்ளும் வாய்ப்புகள் பிரகாசமடைந்திருக்கின்றன.

மஇகா போட்டியிடும் மற்ற தொகுதிகள்

சுங்கை சிப்புட், தாப்பா தவிர்த்து மஇகா குறிவைத்திருக்கும் மற்ற தொகுதிகள் எவை எனப் பார்ப்போம்.

2018 பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது மஇகா. அதே எண்ணிக்கை அல்லது அதற்கும் கூடுதலான தொகுதிகளை தேசிய முன்னணியில் பெற போராடுவோம் என மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.

அதே வேளையில் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் என்றால் அதில் போட்டியிட்டு, பணத்தையும் ஆற்றலையும் விரயம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறார்.

அதன்படி பார்த்தால் மஇகாவுக்கு 9 தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்படும் சாத்தியம் நிலவுகிறது. வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டால் ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு, 6 அல்லது 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் எண்ணத்தையும் மஇகா கொண்டிருக்கிறது.

விட்டுக் கொடுக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப் பதிலாக கூடுதலாக மாநில சட்டமன்றங்களைப் பெறவும் மஇகா வியூகம் வகுத்திருக்கிறது.

தற்போது தேசிய முன்னணியில் அங்கம் வகிக்காத கெராக்கான் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றைப் பெற மஇகா போராடி வருகிறது. அந்தத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதிகளை மஇகா இந்த முறை குறிவைத்திருக்கிறது.

அவ்வாறு மஇகா குறிவைத்திருக்கும் மற்ற தொகுதிகளைப் பற்றி அடுத்த காணொலியில் விரிவாகப் பார்ப்போம்!

-இரா.முத்தரசன்