Home One Line P1 செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)

செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)

785
0
SHARE
Ad

(கடந்த 03 அக்டோபர் 2020-இல் “செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் இடம் பெற்ற “மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)” என்ற தலைப்பிலான கீழ்க்காணும் காணொலியின் கட்டுரை வடிவம்)

செல்லியல் பார்வை | The Parliament seats MIC is eyeing (Part 2) | 03 October 2020 மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)

மஇகா மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடக் கூடிய வாய்ப்புகள் கொண்ட தாப்பா, சுங்கை சிப்புட் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து மஇகா குறிவைத்திருக்கும் மற்ற தொகுதிகள் எவை என்பதைப் பார்ப்போம்.

ஜோகூரின் சிகாமாட் தொகுதி

எம்.அசோஜன்
#TamilSchoolmychoice

1982 முதல் மஇகா போட்டியிட்ட தொகுதி என்ற காரணத்தால் மீண்டும் மஇகாவுக்கு இந்தத் தொகுதி கிடைக்கலாம். மஇகா தலைமைச் செயலாளர் எம். அசோஜன்  இந்தத் தொகுதியின் மஇகா ஒருங்கிணைப்பாளராக தேர்தல் பணியாற்றி வருகிறார்.

சிகாமாட் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவர். மஇகாவுடனும் அதன் தலைவர்களுடனும் நல்ல நட்பு கொண்டவர்.

எனவே, அந்தத் தொகுதியை எட்மண்ட் சந்தாராவுக்கு விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் மஇகா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்மண்ட் சந்தாரா சார்ந்திருக்கும் பெர்சாத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி மீண்டும் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுடன் கூட்டணி அமைக்குமா?

அல்லது எதிரெதிர் அணிகளில் மோதிக் கொள்ளுமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது.

எட்மண்ட் சந்தாரா

எனவேதான், சிகாமாட் தொகுதிக்கு மாற்றாக சிம்பாங் ரெங்கம் தொகுதியை மஇகா குறி வைத்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் கெராக்கான் போட்டியிட்ட ஒரே தொகுதி இது. எனினும் கெராக்கான் கட்சி பெர்சாத்து வேட்பாளர், முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கிடம் இந்தத் தொகுதியில் தோல்வியைத் தழுவியது.

ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் அல்லது சிம்பாங் ரெங்கம் இரண்டில் ஒன்று மஇகாவுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சன் தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்கும்

போர்ட்டிக்சன், அன்வார் இப்ராகிம் போட்டியிடும் தொகுதி என்றாகிவிட்டது. வெற்றி வாய்ப்பு இல்லாத அந்தத் தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று நாடாளுமன்றத் தொகுதி நெகிரி மாநிலத்திலேயே ஒதுக்கப்படுமா அல்லது மற்ற மாநிலங்களில் ஒதுக்கப்படுமா என்பது இதுவரையில் தெரியவில்லை.

சிலாங்கூரில் உலுசிலாங்கூர் தொகுதி மட்டுமே நிச்சயம்

சிலாங்கூர் மாநிலத்தில் உலுசிலாங்கூரில் மீண்டும் மஇகா போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் இங்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சிலாங்கூரில் கடந்த முறை போட்டியிட்ட கோத்தா ராஜா, காப்பார், சுங்கை பூலோ  ஆகிய 3 தொகுதிகளை பாஸ் அல்லது அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, மாற்றுத் தொகுதிகளை மஇகா கோரிவருகிறது. இந்த மூன்று தொகுதிகளுமே மலாய் வாக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்டவை என்பதால், அம்னோ-பாஸ் கட்சிகள் இங்கே வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாற்றாக, கணிசமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு மஇகா குறிவைத்திருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் மஇகா வலுவுடன் திகழும் தொகுதி என்பதால் சிப்பாங், மஇகாவுக்கு இந்த முறை ஒதுக்கப்படலாம்.

ஆக சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர் தவிர்த்து கூடுதலாக மற்றொரு தொகுதி மஇகாவுக்குக் கிடைக்கலாம்.

பேராக்கில் தெலுக் இந்தான் தொகுதி கிடைக்கலாம்

டத்தோ டி.முருகையா

தெலுக் இந்தான், கடந்த முறை கெராக்கான் போட்டியிட்டு தோல்வியடைந்த தொகுதி. மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா இங்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு களப்பணி ஆற்றி வருகிறார்.

கணிசமான இந்திய வாக்குகள் சுமார் 20 விழுக்காடு இருப்பது மஇகாவுக்கு சாதகம். மலாய் வாக்குகளும் 40 விழுக்காடு இருக்கின்றன. கடந்த முறை இங்கு போட்டியிட்ட பாஸ் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. இந்த முறை பாஸ் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்காது என்பதால் மஇகா-தேசிய முன்னணிக்கு கூடுதல் சாதகம் நிலவுகிறது.

பினாங்கில் நிபோங் திபால் தொகுதி மஇகாவுக்குக் கிடைக்குமா?

பினாங்கில் வழக்கமாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மஇகா இந்த முறை கூடுதலாக நிபோங் திபால் நாடாளுமன்றத்தைக் குறிவைத்திருக்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் கெராக்கான் போட்டியிட்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று.

ஜெ.தினகரன்

பினாங்கு மஇகாவின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜெ.தினகரனன் நிபோங் திபால் ஒருங்கிணைப்பாளராக தீவிரமாக இங்கு தேர்தல் பணியாற்றி வருகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் 6,800 வாக்குகள் பெற்ற பாஸ் இந்த முறை போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும்; இந்தத் தொகுதியில் 48 விழுக்காடு மலாய் வாக்காளர்கள்; 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது  நிபோங் திபாலில் மஇகாவுக்கு இருக்கும் சாதகங்கள்.

கெடாவில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி

கெடாவில் இதுவரை நாடாளுமன்றத் தொகுதி எதிலும் மஇகா போட்டியிட்டதில்லை. இந்த முறை பாடாங் செராய் தொகுதியைக் குறிவைத்திருக்கிறது.

சிவராஜ் சந்திரன்

மஇகா உதவித் தலைவர்களில் ஒருவரான சிவராஜ் சந்திரன் பாடாங் செராய் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது பிகேஆர் கட்சி சார்பில் எம்.கருப்பையா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

கெடாவை ஆட்சி செய்து வரும் பாஸ் கட்சியின் ஆதரவு, 21 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் – போன்ற அம்சங்கள் பாடாங் செராயில் மஇகாவுக்குக் கூடுதலாக இந்தத் தொகுதியில் நிலவும் சாதக அம்சங்கள்.

பகாங்கில் கேமரன் மலைக்கு பதிலாக மற்றொரு தொகுதியா?

2019-இல் நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் பூர்வகுடி வேட்பாளருக்காக அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தது மஇகா. 2018 பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவராஜ் தற்போது பாடாங் செராய் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே, கேமரன் மலை மீண்டும் மஇகாவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அதற்குப் பதிலாக பகாங் மாநிலத்தில் இன்னொரு நாடாளுமன்றம் அல்லது அல்லது அதற்குப் பதிலாக சட்டமன்றத் தொகுதி ஒன்று ஒதுக்கப்படலாம்.

ஆக, 9 நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் பெற மஇகா குறி வைத்தாலும், வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளை தேசிய முன்னணியிடம் இருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரையைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம் :

செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)